முட்டாளும் முற்றாளும்
கட்டுரை ( ஏப்ரல் 1 தினக் கட்டுரை )
அறிவியலின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று நைட்ரஸ் ஆக்ஸைடு. சிரிப்பூட்டும் வாயு அது. அப்படியென்றால் கோபமூட்டுவதற்கென்று ஒரு வாயு இருக்க வேண்டுமே? வேண்டியதில்லை, அதற்குத்தான் வாய் இருக்கிறதே! சிலர் பேசத் தெரியாமல் பேசி கோபத்தை மூட்டுவர். கோபமே வராத நபரிடம், உனக்கு அறிவு இருக்கிறதா என்றோ அல்லது நீயொரு முட்டாள் என்று சொன்னால் போதும்? சொன்னவர் பாடு அவ்வளவேதான்! முட்டாள் என்கிற சொல் இன்று மன்னர், அரசியல், குடியரசு என்கிற சொல்லிற்கு அடுத்ததாக அதிகம் உச்சரிக்கப்படும் சொல்லாக இருக்கிறது. அதற்காக ஒரு தினம் கொண்டாடுமளவிற்கு அந்த சொல் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. .
முட்டாள் ஒரு தமிழ்ச்சொல். சிலையை அல்லது இராணியைப் பல்லக்கில் வைத்துத் தூக்கி வருகிறவர்கள், பல்லக்கைக் கீழே இறக்காமல் இளைப்பாறுவதற்காக இருபுறமும் ஒரு மரத்தால் முட்டுக் கொடுப்பார்கள். அவர்களுக்கு அந்த ஒரு வேலையைத் தவிர வேறு வேலை தெரியாது. இவர்கள் முட்டு + ஆள் – முட்டாள்.
“அடேய்
முட்டாள் புருனோ! நீ சொல்வதைப்போல உலகம் உருண்டையானது என்றால்;
சொர்க்கம் எங்கேயடா இருக்கும்?” என்று ரோம் நீதிமன்றம் கேட்டது. புருனோ சொன்னார்,
“அதையேதான் நானும் கேட்கிறேன். சொர்க்கம் எங்கே இருக்கும்?“. நீதிமன்றம், கேட்ட கேள்விக்கு
புருனோவால் பதில் சொல்ல முடிந்தது. ஆனால் புருனோவின் கேள்விக்கு என்ன பதில்?
பரமார்த்த குரு கதையில் ஒரு குருவுக்கு ஐந்து சீடர்கள். அவர்கள் மட்டி, மடையன், முட்டாள், மூடன், மண்டு. மடையன் என்பதற்கு சமையற்காரன் என்றொரு பொருளுண்டு. கோவிலில் பிரசாதம் சமைக்கும் இடம் மடைப்பள்ளி. இச்சொல்லின் திரிபு மடவன். மடவன் என்கிற சொல் மடமை எனும் வேர்ச்சொல்லிருந்து கிளைத்தது. இத்துடன் தொடர்புடைய வேறு சொற்கள்: மடத்தி, மடந்தை, மடத்தனம். மடமை .
பிரெஞ்சு
உளவியலறிஞர் ஆல்பர்ட் பினே மனிதனின் கால வயதை மன வயதால் வகுத்து சதவீதமாக மனிதனின் நுண்ணறிவை வகைப்படுத்தினார்.
இதன்படி முட்டாள், பின்னடைந்தோர், பின் தங்கியோர்,திறனுடையோர், புத்திசாலிகள், மிக்க
திறனுடையோர், மேதைகள் என அட்டவணைப்படுத்தினார். உலக மக்கட்தொகையில் ஒரு சதவீதத்தினர்
மேதைகள், ஒரு சதவீதத்தினர் முட்டாள்கள். அவரது கோட்பாட்டின்படி 50 முதல் 69 வரை நுண்ணறிவு ஈவு பெற்றவர்கள் முட்டாள்கள்;
140 முதல் 169 வரை பெற்றவர்கள் மேதைகள்.
குட்டை (குட்ட) என்றால் குறைந்த உயரம் என்று பொருள். பல்லக்கை மிகக் குறைந்த உயரத்திற்கு இறக்குகையில் முட்டுக் கொடுக்கும் ஆள் குனிந்தே முட்டுக் கொடுக்க வேண்டும். இதிலிருந்து பிறந்ததே , 'குட்டக் குட்டக் குனிபவன் முட்டாள்' என்கிற பழமொழி. இங்குக் குட்ட என்பது தலையில் கொட்டுதல் அல்ல. முட்டு - முட்டன் - மூடன் ; முட்டு - முட்டி - மட்டி ; முட்டு - மொட்டை - மட்டை - மூடன் ; முண்டு - மடமை ; முண்டம் - அறிவில்லாதவன்; மொண்ணை - கூரின்மை ; மழுக்கு - மக்கு - மதியற்றவன்,... யாவும் முட்டு என்கிற சொல்லுடன் தொடர்புடையவை.
கடந்த
நூற்றாண்டில் மூளையை அதிகமாகப் பயன்படுத்தியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அவர் கண்டுபிடித்த
சார்புநிலை தத்துவம் உலக தத்துவங்களில் தலை சிறந்தது. அத்தகைய விஞ்ஞானி ஐன்ஸ்டீனை முட்டாள்
எனப் பாவிப்பவர்களும் உண்டு. அவர் வீட்டில் வளர்த்த பூனை கூண்டுக்குள்ளேயிருந்து வெளியேற
பெரிய பாதையும், அதன் குட்டிகள் வெளியேற சிறிய பாதையும் வைத்திருந்தார். தாயும், குட்டியும்
வெளியே வர ஒரு பொது வழி போதும் என்கிற பொது அறிவு அவரிடம் இல்லை.அவரொரு முட்டாள், என
அவரைக் கிண்டல் செய்தவர்கள் உண்டு.
முட்டாள்
என சித்தரிக்கப்பட்டவர்களால்தான் உலகம் பல மாற்றங்களை கண்டியிருக்கிறது. தாய், தன்னை முட்டாள் எனச் சொன்னதற்காகத் துப்பாக்கியால்
சுட்டுக்கொள்ள முயற்சிதான் ஒரு சிறுவன். ஒரு முறையல்ல மூன்று முறை. என்ன அதிர்ஷ்டம்
பாருங்கள்! மூன்று முறையும் அந்த துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை. முட்டாள் என அழைக்கப்பட்ட அந்த சிறுவன்தான் , பிற்காலத்தில் நவாபுகளை வென்று ஆங்கிலேய
கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்ற காரணமாக இருந்தான். அவன்தான் ஆற்காட்டு வீரர்
என அழைக்கப்படும் இராபர்ட் கிளைவ்.
முற்றன் என்பதற்கு முழுமையானவன் என்று
பொருள். இச்சொல்லைத் தேவாரம்,'முற்றிலாதானை முற்றனே யென்று மொழியினும்' எனப் பாடியுள்ளது. முற்று - முற்றன் அதாவது முழு நிறைவானவன் ; முற்றும் × முற்றாமை ; முற்றாமை - முடிவு பெறாமை ; முற்று + ஆ - முற்றா;
முற்றவை - அறிவால் முதிர்ந்தோர் கூடிய அவை. முற்றறிவு என்பது முழுதுணரும் அறிவு. முற்றறிவன் என்றால் எல்லாம் அறிந்தவன். முற்று + ஆள் = முழுவதும் ஆள். இதற்கு முழுமகன் என்றொரு பொருளுண்டு. முழுமகன் – என்றால் அறிவிலி என்கிறது திவாகர நிகண்டு.
முட்டாள்
என்கிற சொல் விளையாட்டுத் துறையிலும் அதிகம் விளையாடியிருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டின்
தாயகம் இங்கிலாந்து. ஒரு கட்டத்தில் அந்த நாடு கிரிக்கெட் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம்
கொடுத்து வந்தது. அதை எழுத்துலக வேந்தன் பெர்னாட்ஷா இவ்வாறு விமர்சித்தார். “பதினொரு முட்டாள்கள் விளையாட,
பதினோராயிரம் முட்டாள்கள் பார்ப்பது கிரிக்கெட்”.
முட்டாள்
கதாபாத்திரங்கள் இலக்கியத்துறையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றன. உலகில் அதிக மக்களால் விரும்பி வாசிக்கப்படுவது முட்டாள்
அரசனை கதாபாத்திரமாகக் கொண்ட அரேபிய புத்தகம், ‘ஆயிரத்து ஓர் இரவுகள்’. தமிழில் எழுதப்பட்ட முட்டாள் சீடர்களைக்
கொண்ட பரமார்த்த குரு கதைக்கு இன்றைக்கும் வாசகர் பரப்பு உண்டு.
முதல்
நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதன் ஜீலியஸ் சீசர் . இவர்தான் முதலில் நாட்காட்டி முறையை
அறிமுகப்படுத்தினார். வருடத்திற்கு 365 ¼ நாட்கள்
என நிர்ணயிக்கப்பட்டதும் இவர் காலத்தில்தான். சீசருக்கு முந்தைய காலத்தில் நாட்காட்டி
முறை இருந்தாலும் அது சந்திரனை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. சோஜிஜென் எனும் வானவியல்
வல்லுநரின் ஆலோசனையினால் , சீசர் சூரியனை அடிப்படையாகக் கொண்டு நாட்காட்டி
முறையினை அறிமுகப்படுத்தினார். இந்த நாட்காட்டியானது பத்து மாதங்களைக் கொண்டும்
வருடத்தின் முதல் மாதமாக ஏப்ரலை கொண்டும் இருந்தது.
ஏப்ரல் என்பதற்கு கிரேக்க மொழியில் தொடக்கத்திலிருந்து எனப் பொருள்படும். இந்த நாட்காட்டி 1581 வரை நடைமுறையிலிருந்தது. 1582 ஆம் ஆண்டு தொடக்கத்தில்
போப் கிரிகோரி புதிய நாட்காட்டி ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்த நாட்காட்டி 12 மாதங்களைக்
கொண்டும் முதல் மாதமாக ஜனவரியைக் கொண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. அந்த நாட்காட்டிதான்
இன்று நடைமுறையில் இருக்கிறது.
உலகில் பல வகையான நாட்காட்டிகள் உண்டு. உதாரணமாக டிசம்பர் 21 உடன் முடிந்த மாயன் நாட்காட்டி, இஸ்லாமிய
நாடுகளில் அரபிக் நாட்காட்டி, சீன நாட்காட்டி ,
தமிழ் நாட்டில் திருவள்ளுவர் நாட்காட்டி.......என பலவகையான நாட்காட்டிகள் பயன்பாட்டில்
இருக்கின்றன. அதேபோன்று ஒவ்வொரு நாட்டிலும் வருடப்பிறப்பில் சர்ச்சைகள் இருந்துக் கொண்டிருக்கின்றன.
தமிழ்மாதங்களில் வருடப்பிறப்பு சித்திரை என்கிறார்கள்
ஒரு பிரிவினர். மற்றொரு பிரிவினர் தை என்கிறார்கள் அல்லவா!. இந்தியாவில்
முகலாய மன்னன் ஔரங்கசிப் காலம் வரைக்கும் கனிஸ்கர் அறிமுகப்படுத்திய சக ஆண்டு
நாட்காட்டிதான் நடைமுறையில் இருந்தது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வருகைக்குப்பின்
ஆங்கில நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. இருப்பினும் நம் நாட்டின் தேசிய காலண்டரும்
சக நாட்காட்டிதான்.
ஐரோப்பிய நாடுகளில் இன்றும் இரண்டு விதமான நாட்காட்டிகள்
பயன்பாட்டில் இருக்கிறது. ஒரு பிரிவினர் ஜனவரி முதல் தேதியைப் புத்தாண்டு தினமாகக்
கொண்டாடி மகிழ்கின்றனர். மற்றொரு பிரிவினர் ஏப்ரல் முதல் தேதியைப் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஆங்கில மொழியைத் தாய் மொழியாக் கொண்ட நாடுகள் ஒன்று கூடி தீர்க்கமான
ஒரு முடிவை எடுத்தன. ஜனவரி முதல் தேதியே புத்தாண்டு தினம். இதை ஏற்க மறுத்து ஏப்ரல் முதல் தேதியைக் கொண்டாடுபவர்கள் முட்டாள்கள்
எனச் சித்தரித்தார்கள். அது முதல் ஏப்ரல் முதல்
தேதி முட்டாள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவின்
முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், ஏப்ரல் முதல் தேதி முட்டாள் தினம் எனச் சித்தரிப்பதை
ஏற்க மறுத்தார். அதன்படி ஏப்ரல் முதல் தேதியில் ஒரு புரட்சிகரமான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த
விரும்பினார். 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல்
தேதி அவர் மக்கள் முன் உரையாற்றுகையில் “ ஏப்ரல் முதல் தேதியை உலகம் எப்படிப் பார்க்கிறதோ
, நாம் இந்த நாளை மாற்றத்தின் தினமாகப் பார்ப்போம்“
என்றவர் காலணா, அரையணா, நாணய முறையை ஒழித்து,
தசம நாணய ( உரூபாய்) முறையை அறிமுகப்படுத்தினார்.
உலக
அளவிலான நாடாளுமன்ற விவாதத்தில் முட்டாள் சொல் பற்றிய விவாதமே மிகச்சிறந்த நகைச்சுவை
விவாதமாகக் கருதப்படுகிறது. ஜெர்மனி நாடாளுமன்றத்தில் ஒரு முறை பிஸ்மார்க், “இங்கே
இருப்பவர்களில் பாதிப் பேர் முட்டாள்கள்” என்றார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
உடனே அவரது கருத்தைத் திரும்பப்பெற்றுக்கொண்டார் “ இங்கே இருப்பவர்களில் பாதிப் பேர்
முட்டாள்கள் அல்ல“ .
இந்த
உலகில் தன்னை முட்டாள் என அடையாளப்படுத்திக்கொண்டவர்கள்
இரண்டு பேர்தான். ஒருத்தர் நடிகர் சந்திரபாபு .“ நானொரு முட்டாளுங்க, நல்லா படிச்சவங்க
நாலு பேரு சொன்னாங்க “ என பாடினார். மற்றொருவர் பிரெஞ்சு நாட்டுப் புரட்சியாளர் வால்டர்.
“உலகில் வாழும் மனிதர்கள் எல்லோரும் புத்திசாலிகள் என நினைத்துக்கொண்டு இருந்துவிட்டேன்.
நான் ஒரு முட்டாள்” என்றார்.
'படிக்காத பேதையர்களுக்கு நண்பனாக இருத்தல், கோபம் கொண்ட மனைவியைக் கோலால் அடித்தல், சிறுமையான குணம் உடையவர்களை வீட்டுக்குள் அழைத்துச் செல்லுதல் ஆகிய இம்மூன்றும் முட்டாளின் காரியங்களாகும்' என்கிறது திரிகடுகம். இதன் உரையாசிரியர் ஞா.மாணிக்கவாசகன் முட்டாள் என்கிற சொல் முற்றாள் என்கிற சொல்லிருந்து திரிந்தது என்கிறார். அதாவது முற்றாள் என்பதற்கு அறிவுக்கே இடமில்லாமல் உடல் முழுவதும் வெற்று ஆளாகவே இருப்பவன் என்று பொருள்.
உலகில்
முதன்முதலாக, நீதிமன்றத்தால், முட்டாள் என குற்றம் சாட்டப்பட்ட சாக்ரடீஸ், அவர் நஞ்சு
பருகி மரணத்தைத் தழுவும் முன் இவ்வாறு சொன்னார் “ நான் ஒரு முட்டாள் என்கிறீர்கள்.
அப்படியானால் இனி இந்த உலகம் முட்டாள்களின்
கீழ்தான் இயங்கபோகிறது ” என்றார். அவரது கருத்துபடிதான் இன்றைய உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஆமாம், இன்றைய உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கும், கணினிக்கு நாம் சூட்டியிருக்கும் பெயர் முட்டாள் இயந்திரம் அல்லவா!
- எழுத்தாளர் அண்டனூர் சுரா

கருத்துகள்
கருத்துரையிடுக