தெக்கணமும் அதிற்சிறந்த @அண்டனூர் சுரா
“நான் பாடினால் என் மன்னன் எழுந்து நிற்பார்”. “எங்கே பாடும் பார்க்கலாம்” புலவர் பாடுகிறார், “ஜன கண மன...” மன்னன் எழுந்து நிற்கிறார். ஒரு பள்ளி ஆண்டு விழாவில் நடைப்பெற்ற மேடை நாடகம் இது. தேசிய கீதத்திற்குக் கிடைக்கும் இந்த மரியாதை தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் பல மேடைகளில் கிடைப்பதில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து எப்பொழுதெல்லாம் புறக்கணிப்புக்கும் அவமதிப்புக்கும் உள்ளாகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டில் இனவாத அரசியல் எழுவதைத் தவிர்க்கமுடிவதில்லை.
ஒரு அரசு விழாவில் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிப்பேழையில் ஒலிக்கவிடப்பட்டு பாடல் பாதியில் நின்றுவிட்டது. பிற்பகுதியை அமைச்சர்கள், அதிகாரிகள் பாடி முடிக்க வேண்டும். அவர்களுக்குப் பாடத் தெரியவில்லை. தவறும் பிழையுமாக பாடி அதை முடித்து வைத்தார்கள். இங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பிற்கு உள்ளானது. ஆனால் இங்கு இனவாத அரசியல் எழுந்ததா என்றால் இல்லை. காரணம் இந்த அவமதிப்பு நம்மவர்களால் நிகழ்ந்தது.
ஒரு முறை மத்திய அரசுடன் நெருக்கமான உறவுகொண்டிருந்த ஒருவர் தமிழ்நாட்டில் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்பட வேண்டும் என்பதை அரசியல் கருத்தாக வைத்தார். ஒரு விழாவில் சொல்லப்பட்ட அந்தக் கருத்து அன்றைய தினமே அரசியலானது. சமீபகால தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பில் உச்சமென்று 2018 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுகையில் அமர்ந்திருந்ததைச் சொல்லலாம். இவர் தேசிய கீதம் இசைக்கையில் எழுந்து நின்றவர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அமர்ந்தே இருந்தார். இதற்கு விஜயேந்திரர் வருத்தம் தெரிவிக்கவோ, வருந்தவோ இல்லை. “மடத்தில் பாடப்படும் வழிபாட்டுப் பாடல்களுக்குகூட பக்தர்கள் எழுந்து நிற்பார்களே ஒழிய மடாதிபதிகள் எழுந்து நிற்க மாட்டார்கள். இது எங்கள் சம்பிரதாயம்” என்று மடத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்தார். தேசிய கீதம் பாடும்போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்றாரே ஏன் என்கிற கேள்விக்கு, “தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காவிட்டால் அது குற்றம். தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?” என்று கேட்டிருந்தார்.
2022 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கொண்டாடிய குடியரசு தின விழாவில் ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி கொடி ஏற்றினார். இதன் பின்னர் தமிழ்த்தாய் இசைக்கப்பட்டது. இந்தப் பாடலுக்கு சில அதிகாரிகள் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தனர். “தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்பொழுது எழுந்து நிற்காதது ஏன்?” என்று அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்கையில், “அவ்வாறு எழுந்து நிற்கவேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் உத்தரவு உள்ளது” என்று அவர்கள் கூறினார்கள். அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று அரசாணை உள்ளது என மீ்ண்டும் எடுத்துக் கூறவே, “ இனி வரும் நாள்களில் எழுந்து நிற்கிறோம்” என்று பதிலளித்தார்கள். இதன்பிறகு அன்றைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனைச் சந்தித்த ரிசர்வ் வங்கியின் சென்னை இயங்குநர் எஸ்.எம்.என். சாமி அவர்கள் சந்தித்து விளக்கம் அளித்தார். இந்த சம்பவத்திற்காக வருத்தமும் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 18 அன்று சென்னை பிரசார் பாரதி அரங்கில் நடைபெற்ற இந்தி மாத விழாவில் மேதகு ஆளுநர் ஆர். என். ரவி அவர்கள் கலந்துகொண்ட ஒரு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்கிற வரியை விடுத்து பாடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல் இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பகுதி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டை, மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?” என்று அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். மேலும், “தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதிக்க வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று பதிவிட்டார். அதில் “ஆளுநரா, ஆரியநரா?” என்று கேட்டிருந்த கேள்வியால் ஆரியம், திராவிடம் மீண்டும் விவாதமானது. இதற்கு ஆளுநர் அவரது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதில் அளித்தார். “ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாகப் பாடுவேன் என்பதையும் அதை பக்திச் சிரத்தையோடும், பெருமையோடும் பாடுவேன் என்பதும் அவருக்குத் தெரியும். நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில் சமீபத்திய நடவடிக்கையாக வடகிழக்கு மாநிலத்தில் தமிழைப் பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தைத் தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயிர் அரசியலைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. இனவாதக் கருத்துக்களையும் தவறான குற்றச்சாட்டுகளையும் அவசரகதியில் முதலமைச்சர் பொதுவெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட நிகழ்வுக்கு பிரசார் பாரதி மன்னிப்பு கேட்டுக்கொண்டது. “டி.டி சென்னை சார்பில் நடந்த ஹிந்தி மாத நிறைவு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தின் ஒரு வரி கவனக்குறைவால் விடுபட்டு விட்டது. அந்தத் தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம். தமிழையோ, தமிழ்த் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் நோக்கம் இல்லை. இந்த விசயத்தில் தமிழக கவர்னருக்கு ஏற்பட்ட சங்கடத்துக்கு மன்னிப்பு கோருகிறோம்.”
The Hon’ble Governor of Tamil Nadu R.N.Ravi graced the commemoration of the Hindi Month valedictory function and the Commemoration of Golden Jubilee Celebration by Doordarshan Chennai. During the rendering of the Tamizh Thai Vazhthu, inadvertent a line was missed, which happened due to a distraction. We apologise for the inadvertent mistake. There was no intention from the singers to disrespect Tamizh or Tamizh Thai Vazhthu. In this regard, We apologise for the inconvience caused to the Hon’ble Governor of Tamil Nadu.
தமிழ்த்தாய் வாழ்த்து மாற்றப்பட வேண்டும் என்கிற கருத்து எழுவதற்கும் இப்பாடல் இசைக்கப்படுகையில் அமர்ந்தே இருப்பதற்கும் குறிப்பிட்ட ஒரு வரியைப் பாடாமல் விலகிச் செல்வதற்கும் காரணமாக இருப்பது திராவிடம் என்கிற சொல் மட்டுமா? தெக்கணம், அதிற்சிறந்த திராவிடம், நல்திருநாடு ஆகிய சொற்களும்தான். இவ்வரியை நீக்கிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுத்துள்ள மறைமுக கூவலாகவும் இதை அவதானிக்க முடிகிறது.
“இந்தத் தென்னகத்தில் திராவிடம் நல்திருநாடு என்றும் அது தெக்கணத்தில் சிறந்தது என்றும் கூறப்பட்டுள்ள இப்பாடல் வரி தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுமையும் புரட்சியும் கொண்டவை. தமிழ்த் தெய்வ வணக்கம் உணர்ச்சியும் உருக்கமும் உறுத்தலும் ஊக்கமும் கொண்டு மறுமலர்ச்சியும் புரட்சியும் தாங்கிய உயிர்ப்புடையது” என்று இவ்வரிகள் குறித்து எழுதியுள்ளார், “மனோன்மணீயம் சுந்தரனாரின் புரட்சி – திறன்” என்ற நூலில் பேராசிரியர் கா. மீனாட்சி சுந்தரம் அவர்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் ஓர் அரசு விழாவில் இசைக்கப்பட்டது ஒரு திரைத்துறையினர் சார்ந்த ஒரு விழாவில்தான். தமிழ்நாட்டில் திரைத்துறையைச் சார்ந்தவர்களே அரசியலில் ஆழமாக கோலோச்சுகிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள திராவிட எனும் சொல்லுக்கு திரைத்துறை அரசியல்வாதிகளின் வினை என்னவாக இருக்கிறதென்று பார்ப்போம். நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் பங்கேற்ற ஒரு விழாவில் தமிழ்த்தாய் இசைக்கப்படுகிறது. திராவிட என்கிற வரி வருகையில் அவரது முகம் இறுக்கமாக மாறுவதை சமூக வலைத்தளத்தில் பார்க்கமுடிகிறது. சீமான் திராவிட என்கிற சொல்லுக்கு எதிரான அரசியலைக் கொண்டிருக்கிறார். திராவிட என்கிற சொல்லை தெலுங்கு, மலையாள, கன்னட மக்கள் ஏற்க முன்வராத பொழுது ஏன் இச்சொல் என்பது அவரது அரசியல் வாதமாக இருந்து வருகிறது. நான் அதிகாரத்திற்கு வந்தால் இந்தப் பாடலைத் தூக்கிவிட்டு வேறு பாடலை வைப்பேன்” என்றார். இதுவே அவரது அரசியலாகவும் இருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் கமலஹாசன் அவர்கள், அவர் அரசியல் கட்சி தொடங்கிய காலத்தையொட்டி ஒரு விவாதத்தில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். “அங்கே திராவிட என்கிற சொல் இருக்கும் வரைக்கும் இங்கே திராவிடம் இருக்கும்.” அவர் குறிப்பிடும் அங்கே என்பது தேசிய கீதம், இங்கே என்பது தமிழ்த்தாய் வாழ்த்து. இவரது அரசியல் நிலைப்பாடு திராவிடம் என்கிற சொல்லையும் அதன் பரப்பையும் உள்ளடங்கியது.
நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியில் திராவிட எனும் சொல் இருக்கிறது. இக்கட்சியினர் திராவிடம் என்கிற சொல்லுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு கொள்ள வாய்ப்பில்லை. புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய் ஓரிரு நாட்களுக்குப் பிறகு இச்சம்பவம் முடிவிக்கு திராவிட என்கிற சொல் உவப்பா, கசப்பா என்பது ஓரிரு மாதங்களில் தெரிந்துவிடும்.
தேசிய கீதத்தில் இடம்பெற்றுள்ள திராவிட சொல்மீது வராத வெறுப்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் இடம்பெற்றுள்ள திராவிட சொல்மீது சிலருக்கு வருகிறது. இப்படியான வெறுப்பு பிற்காலத்தில் எழக்கூடுமென இப்பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக தேர்வுசெய்த தமிழறிஞர் குழு கணித்திருக்குமா என்கிற கேள்வி இந்நேரத்தில் எழுகிறது. இத்துடன் தமிழில் இத்தனையோ மொழி வாழ்த்துகள் இருக்க இப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக தேர்வுசெய்ய காரணமென்ன என்கிற கேள்வியும் சேர்ந்து எழுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்தாக பல பாடல்கள் தேர்வுசெய்யப்பட்டு அப்பாடல்கள் யாவும் தேசிய கீதத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. தேசிய கீதத்திலிருக்கும் புவிஇயல், தொல்லியல், மொழி வளம் யாவும் மனோன்மணீயம் நாடகம் வாழ்த்துப் பாடலில் இருந்ததால் அப்பாடல் வாழ்த்துப் பாடலாக ஏற்கப்பட்டது.
பிரிட்டிஷ் மன்னர் வில்லியம் ஜார்ஜ் இந்தியாவிற்கு வருகையில் அவரை வரவேற்கும்பொருட்டு ஐந்து பத்திகள் கொண்ட ஒரு வாழ்த்து பாடலை வங்க மொழியில் இயற்றினார் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். பிறகு இப்பாடலை அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவரின் நெருங்கிய நண்பரான அபித் அலி இப்பாடலை இந்தியில் மொழிபெயர்த்தார். அதன்பிறகு ஒரே பொருள் கொண்ட மூன்று விதமான தேசியக்கீதம் இந்தியா முழுமையும் பாடப்பட்டன. இம்மூன்று படைப்புகளுக்கும் இசைக்கோர்க்கும் பணியைத் தாகூர் அவர்களே மேற்கொண்டார். இந்தி மொழிபெயர்ப்பு பாடல் முதன்முதலாக டிசம்பர் 27, 1911 அன்று கல்கத்தா இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இசைக்கப்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பிறகு சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான சட்ட வரைவுக்குழு ஜனவரி 14, 1950 அன்று இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஜன கண மன’ பாடலில் உள்ள முதல் பத்தியை மட்டும் தேசிய கீதமாக ஏற்றுக்கொண்டது. தாகூர் முதல் பத்தியைப் புராபி (காலை) ராகத்தில் 52 வினாடிக்குள் பாடி இசையமைத்திருந்தார். எனவே அப்பாடல் தோராயமாக 52 வினாடிக்குள் பாடிமுடிக்க வேண்டும் என காலநிர்ணயம் செய்தது.
தேசிய கீதத்திற்குப் பலரும் குரல் கொடுத்து வந்தார்கள். இசையமைப்பாளர்கள் அவருக்கு பிடித்தமான ராகத்தில், தாளத்தில் இசையமைத்து தனியாக ஒலிப்பேழை வெளியிட்டு சுதந்திர உணர்வைப் பறைச்சாற்றிக்கொண்டார்கள். இந்நிலையில் ஒவ்வொரு மாநிலமும் தனக்கென்று ஒரு மாநிலப் பாடலை உருவாக்கிக்கொள்ள விரும்பியது. மாநில அரசுகள் விழாவின் தொடக்கத்தில் மாநிலப் பாடலையும் நிறைவில் தேசியக் கீதத்தையும் இசைப்பதென வரையறுத்துக்கொண்டது. தாகூர் சுரப்படுத்திய அதிகாலை நேர புராபி ராகம் அதற்கு உகந்ததாக இருக்கவில்லை. எனவே எல்லா நேரத்திற்கும் பொருந்தும்படியான சங்கரா பரணம் ராகத்திலான தேசியக்கீதம் உருவாக்கம் பெற்றது.
தேசியக்கீதத்திற்கென்று தனி சட்டவிதிகள் இல்லை. இந்தியா என்கிற ஒருமித்த உணர்வால் ஒவ்வொரு இந்தியனும் இப்பாடலை மனதால் ஏற்றுள்ளார்கள். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து அரசாணை கொண்டது. தமிழ்நாடு அரசு – பொதுப்பணித்துறை அரசாணை எண் 3584 / 70 – 4 நாள் 23.11.1970 தமிழ்த்தாய் வாழ்த்தை இவ்வாறு வரையறை செய்கிறது.
1. பெ.சுந்தரம் பிள்ளை இயற்றிய மனோன்மணீயம் நூலிலுள்ள “நீராரும் கடலுடுத்த” பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக ஏற்றுக்கொள்கிறது. இப்பாடலை மாநில அரசு, உள்ளாட்சித் துறை மற்றும் கல்வி நிறுவனங்களில் வழிப்பாட்டு பாடலாகவும், விழாத் தொடக்கப் பாடலாகவும் பாடப்பட வேண்டும். விழா முடிவின் போது பாடக்கூடாது.
2. இப்பாடல் மோகன ராகம், திஸ்ரம் தாளத்தில் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசைக்கோர்ப்பின்படி பாடவேண்டும். இந்த இரண்டு உத்தரவுகளுடன்கூடிய ஆணை அன்றைய இணை செயலர் டி.வி. வெங்கடராமன் அவர்களால் பிறப்பிக்கப்பட்டது.
சிலப்பதிகாரம், மணிமேகலை அளவிற்கு ‘மனோன்மணீயம்’ தனித்துவ நூல் அல்ல. தமிழ் மொழிக்குரிய மூலக்கதையும் அல்ல. எட்வர்டு புளுவர் லிட்டன் பிரபு எழுதிய ‘த சீக்ரெட் வே’ எனும் ஆங்கில இலக்கியத்தைத் தழுவி எழுதப்பட்ட நாடக இலக்கியம். சேர மன்னன் பாண்டிய மன்னன்மீது போர் புரிய சூழ்ச்சி மேற்கொள்ளும் கதை. கதையினூடே மெல்லிய ஒரு காதல் கதை.
இந்நாடகத்தை 1891 ஆம் ஆண்டு இயற்றிய பெ.சுந்தரம் பிள்ளை இந்நாடகத்தைத் தமிழ் நாடகத்தின் தந்தை எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியாரிடம் கொடுத்து விமர்சனம் கேட்டறிந்தார். பம்மல் அவர்கள், “இந்த இலக்கிய நாடகம் படித்து உணர்வதற்கு மட்டுமே. அரங்கேற்றுவதற்கு உகந்தது அல்ல” என்றார். அவரது விமர்சனத்திற்கேற்ப அந்த இலக்கியம் இதுநாள் வரை மக்கள் முன் நாடகமாக அரங்கேற்றமாகவில்லை. ஆனால் 1942 ஆம் ஆண்டு எம்,எல், டாண்டன் திரைக்கதையில் பி.யூ.சின்னப்பா நடித்து மனோன்மணீ பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இப்படத்தில்தான் கே.வி. மகாதேவன் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கவிஞர் கண்ணதாசனை வைத்து எழுதவைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. கவிஞர் முதலில் அதை மறுத்து பிறகு அதற்காக ஒரு பாடலை எழுதவும் செய்தார். பல்வேறு தமிழ் அறிஞர்கள் அதை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. பிறகு பாரதியார் மற்றும் பாரதிதாசனின் கவிதைகள், சிலப்பதிகாரம் உட்பட பல்வேறு இலக்கியங்களில் உள்ள வாழ்த்துப் பாடலை எடுத்து வைத்துக்கொண்டு ஆய்வுச்செய்தார்கள். பாரதிதாசன் குழந்தைப் பாடலாக இயற்றிய ‘வாழ்வினில் செம்மையை செய்பவை நீயே, மான்புகழ் நீயே, என் தாயே’ என்கிறப் பாடலும், மனோன்மணீயம் நூலில் பெ.சுந்தரம் பிள்ளை இயற்றிய ‘நீராரும் கடலுடுத்த’ மொழி வாழ்த்துப் பாடலும் தேர்விற்குரியதாகின.
இவ்விரு பாடல்களையும் தாகூர் இயற்றிய தேசியக் கீதத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. தாகூர் ஆங்கிலப் புலவர்களால் பாராட்டுப்பெற்றவர், உலகப் புகழ் பெற்ற கவிஞர். அவரது பாடலுடன் ஒப்பிடுகையில் பெ.சுந்தரம் பிள்ளை இயற்றிய பாடல் புவிஇயல், தொன்மை, மொழிவளத்துடன் நிகர் கொண்டிருந்தது. எனவே சுந்தரம் பிள்ளை இயற்றிய வாழ்த்துப் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஜுலை 7, 1970 அன்று ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. இப்பாடல் வங்கத்தேசத்தின் தேசியப் பாடலான தாகூர் எழுதிய ‘சோனார் பங்களா’ பாடலுக்கு நிகரானது என்கிறார் பெ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் படைப்புகளை ஆய்வு செய்து எழுதிய பேராசிரியர் ந. வேலுசாமி அவர்கள். இப்பாடலைப் பாண்டிச்சேரி தமிழறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் பதிலுக்காக ஐந்து மாதக்காலம் தமிழக அரசு காத்திருந்தது. பாண்டிச்சேரி அரசு பாரதிதாசன் இயற்றிய வாழ்வினில் செம்மையை செய்பவை நீயே என்கிற பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தேர்வுக்குழுவிலிருந்த தமிழறிஞர்கள், “தமிழ் இலக்கிய வாழ்த்துப் பாடல்களில் புவிஇயல், தத்தவஇயல், மொழி இயல், வரலாற்று இயல், தொல்லியல் என பல்துறைகளைக் கொண்டு ஓர் இலக்கியப் பாடல் இயற்றப்பட்டது என்றால் அது மனோன்மணீயம் நாடகத்தின் வாழ்த்துப்பாடல்தான்” என்றார்கள். இப்பாடல் தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தில் வாழ்த்துப் பாடலாக பாடப்பட்டு வந்த பாடலாகும். இப்பாடலின் சிறப்பினை அறிய வேண்டுமெனில் முழுப்பாடலையும் நாம் பாடவேண்டும்! மனோன்மணீயம் நாடகத்தின் மொழி வாழ்த்து பாடலின் மொத்த வரிகள் பனிரெண்டு. அதில் ஐந்து வரிகளை நீக்கி ஏழு வரிகளை மட்டும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக தேர்வு செய்தார்கள். ஒரு வாழ்த்துபப் பாடல் பாடும்போது இன்னொரு மொழி அழிந்தது என கொண்டாடக்கூடாது என்பதற்காக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், ‘ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து‘ என்கிற வரி நீக்கப்பட்டது.
நீர் நிறைந்த கடற்பரப்பை ஆடையாக உடுத்திய நிலமகளின் திருமுகமாகப் பரதக்கண்டம் விளங்குகிறது. “தெக்கணமாகிய தென்னகம் திருமுக நெற்றியாகவும், தமிழகம் நெற்றிப் பொட்டாகவும் கொண்டது (புவி இயல்). ‘அனைத்துலகும் இன்பமுற ‘, ‘எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே ‘ (தொல்லியல் ), ‘பல்லுயிரும் பல உலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர் எல்லையறு பரம் பொருள்‘ (தத்துவம்), கன்னடமும் களி தெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன் உதிரத்து உதித்து எழுந்தே ஒன்று (மொழியியல்)” என்று பல்துறை சிறப்புமிக்க பாடலாக அது இயற்றப்பட்டிருக்கிறது.
மறைமலையடிகள், பரிமாற்கலைஞர், பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை, பாரதியார் உட்பட பலரும் தென்னக மொழிகளின் தாய் ‘தமிழ்’ என்றார்கள். இராமலிங்க அடிகள் தமிழ் எம்மொழிக்கும் தந்தை மொழி என்கிறார். ஆனால் அன்றைய நாளில் தென்னிந்தியாவில் நடந்த மொழி அரசியல் தமிழைத் தாய் அல்லது தந்தை மொழி என்கிற கூற்றை ஏற்றுக்கொள்ள அண்டை மாநிலங்கள் முன்வரவில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழியாளர்கள் திராவிடம் மொழியின் தாய் தமிழ் என்று சொல்வதை ஏற்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். தமிழறிஞர்களைத் தவிர்த்து மற்ற மாநில மொழியாளர்கள் ஒன்றுகூடி ‘தென்னக மொழிகளின் தாய்மொழி தமிழ்‘ என்கிற முழக்கத்தை முறியடிக்க தனி இயக்கம் காண முயன்றார்கள். இதனைக் கருத்தில் கொண்டு கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு, ஆரியம் சொற்கள் பொதிந்த ஐந்து வரிகளை நீ்க்கி மற்ற வரிகளைக் கொண்ட வாழ்த்துப் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டது.
“நீராரும் கடலுடுத்த“ பாடல் “ஆசிரியப்பா ” இலக்கணப்படி அமைந்தப் பாடலாகும். எனவே அது “அகவற்பா ஓசை” உடையது. ஆகவே அப்பாடல் மெல்லிசை மன்னன் எம்.எஸ் விஸ்வநாதனின் இசையில் மோகன ராகத்தில் டி.எம்.சௌந்தராஜன் குரலில் பதிவு செய்யப்பட்டது. இதற்கும் முன்னதாக 1968 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு திரைத்துறையினருக்கு வழங்கப்பட்ட விருதளிப்பு விழாவில் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் சிறந்த பெண் பின்னணிப் பாடகர் விருது பெற்ற பி. சுசிலா அவர்கள் இப்பாடலைப் பாடினார். ஓர் அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது இப்பொழுதுதான்!
மார்ச் 11, 1970 நாளிட்ட The Hindu இதழ் தமிழ்த்தாய் வாழ்த்து தேர்வு செய்த செய்தியை இவ்வாறு பதிவு செய்தது.
New Prayer Song for Tamil Nadu
A poem written by the late prof. P. Sundaram pillai, Professor of history in the Trancore University and a noted Tamil scholar, has been adopted as the prayer song for Tamil Nadu Goverment function. It is a two – stanza verse beginning with ‘Neerarum kadaludutha….’ from prof. Sundaram pillai’s play, ‘Manonmaniam’. Only the first six-line stanza is to be used for the purpose of the state prayer song. An announcement about the prayer song was made by the Chief Minister, Mr.M.Karunanidhi, in his speech at the presentation here (Madras, March 10) early this week of state Awards for the best Tamil films, artistes and technicians of 1968. M.S.Visvanathan (best music director), who composed a new tune for ‘Neerarum kadaludutha’ sang it along with P. Susheela (est female playback singer) for prayer at the colourful awards presentation ceremony. Singing the fame of Tamil Nadu and the Tamil language the prayer – poem refers to Dravida nadu as the beautiful ‘tilakam’ on the beautiful forehead (Deccan) of the ‘beautiful face of the world’ that is Bharat.
நீர் நிறைந்த கடற்பரப்பை ஆடையாக உடுத்திய நிலமகளின் திருமுகமாகப் பரதகண்டம் விளங்குகிறது. தெக்கணமாகிய தென்னகம் திருமுக நெற்றியாகவும் திராவிடம் நெற்றிப் பொட்டாகவும் தமிழ்மொழி எத்திசையும் புகழ் மணக்கவும் உலகெங்கும் இன்புறவும் தக்க திலக நறுமணமாகவும் திகழ்கின்றன என்கிற பொருளில் பெ.சுந்தரம் பிள்ளை இப்பாடலை இயற்றினார். தென்னகம் முகத்தில் நெற்றிப் பொட்டாக இருக்கும் ‘திராவிடம்’ மீண்டுமொரு இனவாத விவாதமாக உருவெடுத்திருக்கிறது. இந்த விவாதம் வெற்றி தோல்வி என்பதைக் கடந்து இந்திய தேசிய ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கக் கூடியது.
இக்கட்டுரை நவம்பர், 2024 உயிர் எழுத்து இதழில் பிரசுரமானது.
%20(1).jpeg)
.jpg)
.jpg)


வணக்கம்
பதிலளிநீக்குதமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் இத்தனை நாள் சூழல் குறித்த தங்களின் கட்டுரை சிறப்பு. பல விடயங்கள் அதில் பேசப்பட்டுள்ளது. மகிழ்ச்சி. தேசிய கீதமும் அது உருவாக்கப்பட்ட சூழலும் மிகச் சிறப்பாக விவரித்துள்ளீர்கள். ஆணை பெறப் படாத ஆங்கிலேயர் ஒருவரை வரவேற்கும் முகத்தான் இயற்றப்பட்ட பாடலுக்கு நம்மவர்கள் கொடுக்கும் மரியாதை உயர்தர செம்மொழியாய் உலகின் மூத்த மொழியாய் விளங்கும் தமிழ் மொழியின் வணக்க பாடலுக்கு தராமல் போவது தான் அம்மொழியின் மிகப்பெரிய சாபக்கேடாக உள்ளது. உட்பகையவர்களாலும் புறப்பகைவர்களாலும் நாளும் சூழலில் பகைவர்களை அழித்து உலகின் மூத்த மொழி உயர்தனிச் செம்மொழி என நிறுவிய நம்மால் நம் உட்பக இவர்களை அழிக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதனினும் வருத்தமான தகவல் தமிழ்த்தாய் வாழ்த்தினை அனைத்து இடங்களிலும் பாடுவதற்கு வழிவகை செய்த கரந்தை தமிழ் சங்கத்தின் வரலாறு மறைக்கப்பட்டது என்பதுதான். 1911 ஆம் ஆண்டு தஞ்சையில் தமிழ் சான்றோர்களால் ராதா கிருட்டிணன் அவர்களால் உருவாக்கப்பட்டது கரந்தைத் தமிழ்ச்சங்கம். அதன் முதற் தலைவராய் செம்மாந்து தமிழ் பணியாற்றிய தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள் தான் விரும்பிய தமிழ்ச் சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுந்தரம் பிள்ளை அவர்களின் நீராரும் கடலுடுத்த பாடலை ஒவ்வொரு நிகழ்வின் தொடக்கத்திலும் பாடவகை செய்தார்கள். கரந்தைத் தமிழ் சங்கத்தில் அப்படியே அனைத்து நிகழ்வுகளிலும் இப்பாடல் பாடப்பட்டது. கரந்தைக்கு அருகாமையில் இருக்கக்கூடிய கூடலூர் எனும் கிராமத்தைச் சார்ந்த ராமசாமி வன்னியர் என்பவர் தான் இப்பாடலை ஒவ்வொரு நிகழ்விலும் தன் கம்பீரக் குரலால் பாடி வந்தார். அறந்தை தமிழ் சங்கத்திற்கு வந்த தமிழ் சான்றோர்களும் மற்றும் நீ பாடலைக் கேட்டு தங்கள் ஊரில் நடக்கும் நிகழ்வுகளிலும் இப் பாடலை பாட அவர்கள் முடிவு செய்தார்கள். மேலும் இவ் பாடல் பொதுவெளி எங்கும் பரவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அற்றைய நாள் தலைவர் தமிழவேள் உமாமகேஸ்வரனார் அவர்கள் துண்டு பிரசுரங்கள் கையெழுத்து பிரதி என இப்பாடலைப் பொது மக்களிடையே பரப்பினார்கள். இப்படியாகவே அற்றை நாள் கொண்டு தமிழகம் முழுமையும் இப்பாடல் பாடப்பட்டு வந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சியின் முடிவிற்குப் பிறகு திராவிட கட்சிகள் ஆட்சி பொறுப்பை ஏற்ற நிலையில் பொதுவான ஒரு பாடலாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குழு அமைக்கப்பட்டு அதில் சுந்தரனார் அவர்களின் நீராரும் கடலுடுத்த எனும் பாடலும் அரங்க வேங்கடாசலம் பிள்ளை அவர்களின் வானார்ந்த பொதியின்மிசை என்ற பாடலும் முன்னோடியப்பட்டது. கரந்தை கவியரசின் பாடல் அனைத்து சான்றோர்கள் மனதிலும் இடம் பிடித்த நிலையில் இடம் என்ற ஒற்றை வார்த்தை முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் மனதை ஈர்த்தது. அவர் அப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக ஆணை பிறப்பிக்கும் முன் இயற்கை எய்தினார். வந்த முத்தமிட அறிஞர் கலைஞர் அரசு அப்பாடலுக்கு ஆணை பிறப்பித்து சட்டம் இயற்றியது. உண்மை இவ்வாறு இருக்க.....
தாய் வாழ்த்து பாடலின் முழு உரிமையும் என்னத்திற்கு உரியது என்பதை இவ்விடத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.
நன்றி.