எனது நூல்களும் சமர்ப்பணமும்

 தி இந்து தமிழ்த்திசை இதழில் பழ. அதியமான் "சமர்ப்பணமும் நன்றியும்" எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் சமர்ப்பணம் என்பது மேற்கின் கொடை என்றும் ஆங்கிலேயர்கள் யாருக்கும் நூலைச் சமர்ப்பணம் செய்தால் அவர்களிடம் அனுமதியும் இசைவும் பெற்றே பதிவுசெய்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் சமர்ப்பணம் என்பதற்கு காணிக்கை, படையல், நேர்ந்தளித்தல்,  அர்ப்பணம்,  உரிமையுரை ஆகிய சொற்களைப் பயன்படுத்தியிருந்தார். இதை வாசித்த பொழுது நான் எனது நூல்களை யாருக்கெல்லாம் சமர்ப்பணம் செய்திருக்கிறேன் என்று அசைபோட்டு பார்க்கத் தோன்றியது


சிறுகதைத் தொகுப்புகள்

1. மழைக்குப் பிறகான பொழுது

தாய்வழி தாத்தா தெய்வத்திரு.  சடையப்பன் அவர்களுக்கு

2. திற

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களுக்கு

3. ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை

வாச்சாத்தி என்கிற பெயர்ச்சொல்லை வினைச் சொல்லாக மாற்றியவர்களுக்கு

3. பிராண நிறக் கனவு

நடுநிசி
அவள் கூடாத கனவைக் கண்டவளாய் திடுக்கென விழித்துக் குடிசைக்கு வெளியே ஓடிவந்தாள். அவளுக்குத் திசை தெரியவில்லை. இடம், வலம், மேல், கீழ் புரியவில்லை. எந்த இடத்தில் நிற்கிறேன், எவ்வளவு நேரமாக நிற்கிறேன்,,எவையும் அவளுக்குத் தெரியவில்லை. தெரிந்துகொள்ளும்படியான நிதானத்தை அவள் கண்ட கனவு கொடுத்திருக்கவில்லை. விண்வெளியில் ஒரு நீண்ட சிரிப்பு. கொக்கரிக்கும்படியான சிரிப்பு.
' என் கனவு நிறைவேறாதா?'
இரு காதுகளையும் இறுகப் பொத்திக்கொண்டு அடிவயிற்றிலிருந்து எழும் மூச்சை அடக்கியவளாய்க் கேட்டாள். அவளது கேள்வியை அந்த நடுநிசி ஒரு முறை உள்வாங்கி எதிரொலித்தது.
ஒரு திசையிலிருந்து கரகரப்புக் குரல் வந்தது. "எதை நீ ஈடாகக் கொடுத்தாய். உன் கனவு நிறைவேற?"
சுற்றுமுற்றும் பார்த்தாள். " ஈடா! பத்துத் தலைமுறைக் கனவு என்னுடையது. பல வருடங்கள் கண் விழித்துப் படித்திருக்கிறேன். பல மாதங்கள் தூக்கத்தை இழந்திருக்கிறேன்"

" இதை விடவும் மேலான ஒன்று?"
" தொண்ணூற்று எட்டு விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்கிறேன்"
விண்வெளி கெலித்தது. " தலைமுறை, கண்விழிப்பு, மதிப்பெண். இவையெல்லாம் எம்மாத்திரம்?"
" இதைக் காட்டிலும் ஈடாகக் கொடுக்க என்னிடம் வேறென்ன இருக்கிறது?"
" ஆம், இருக்கிறது"
" என்ன அது?"
" உனது உயிர்"
- அனிதாவிற்கு.

5. எண்வலிச் சாலை
தூத்துக்குடி போராட்டக் களத்திற்கு,,,

6. எத்திசைச் செலினும்
எனது ஆரம்பக் கல்வி ஆசிரியர் கோ. திருப்பதி அரசு மாணவர் விடுதி காவலர் அமரர் வே. பால்ராஜ் இருவருக்கும்



7. தடுக்கை
இலக்கிய நண்பர்கள் சோலச்சி வடுவூர் சிவமுரளி  இருவருக்கும்...



8. குரலி

எழுத்தாளர் செம்பை மணவாளன் அவர்களுக்கு

நாவல்கள்

1. முத்தன் பள்ளம்

முத்தன் பள்ளம் கிராமத்திற்கு ஒரு சாலை வசதி, மழைக்கும் வெயிலுக்கும் ஒழுகாத கூரை, பருவப் பெண்களுக்கேனும் ஒரு பொதுக்கழிப்பறை, குடியிருப்பிற்குப் பட்டா, அங்காடி , அங்கன்வாடி , பள்ளிக்கூடம் , தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் வந்துபோக ஒரு பொதுவழிப்பாதை, ஓர் அச்சமில்லாமல் பெண் எடுத்தல் கொடுத்தல், மழைக்காலங்களில் கூரைத் தண்ணீர் ஒழுகியோட விலைக்கேணும் ஒரு சாண் நிலம், வெயில் காலங்களுக்கு ஒட்டகம், மழைக்குப் பரிசல், வாழும் சந்ததியினருக்குக் குறைப்பட்ச மரியாதை, ஒன்றிய வரைபடத்தில் தனித்த இடம்,...இவற்றில் ஒன்றேனும் இக்கிராம மக்களுக்குக் கிடைக்க யாரேனும் ஒருவர் காரணமாக இருப்பாராயின் அவரது திருவடிக்கு,,,,!

2. கொங்கை

நாஞ்செலிக்கு

3. முதல் வகுப்பு பொதுத்தேர்வு

நீதியரசர் : அடேய் முட்டாள் புரூனோ,  உலகம் உருண்டை என்கிறாயே, அப்படியென்றால் சொர்க்கம் எங்கேயடா இருக்கும்?

புரூனோ: அதையேதான் நானும் கேட்கிறேன். எங்கே இருக்கும்?

புருனோவுக்கு


4.. அப்பல்லோ

மருத்துவக் குடிகளுக்கு

5. அன்னமழகி

"அரிசி திருடியவனுக்கு வயிறார சோறு போடு. நெல் திருடியவனை ஊர்ப்பார்க்க கட்டிவை"  பாடம் சொன்ன என் மூதாதையார் சடையப்பன் சிவப்பாயி இணையர்களுக்கு

6. தீவாந்தரம்

தியாகச் செம்மல் வ.உ.சிதம்பரனார் மற்றும் அவருக்குப் பக்கத் துணையாக நின்ற தியாகிகளுக்கு




7. நீளநடுக்கோடு

எல்லா வகையிலும் எனக்குத் துணையாய் நிற்கும் துணைவியார் திருமதி பானுமதி ராஜமாணிக்கம் அவர்களுக்கு,,,


கட்டுரைத் தொகுப்புகள்

1. முட்டாள்களின் கீழ் உலகம்

எனது தந்தை தாய்  சுப்பையா - பாப்பா இருவருக்கும்


2. அழிபசி தீர்த்தல்

இது கடவுளின் தேசம். இத்தேசத்தில் உன்னைத் திரும்பவும் படைக்க எங்களால் முடியாது சகோதரனே, மதுவிற்கு...

3. சொல்லேர்
வண்ணக்கதிர் ஆசிரியர் அ. குமரேசன், எழுத்தாளர் அ. முத்துலிங்கம், விக்கிப்பீடியா பா.ஜம்புலிங்கம்

4. இனமொழி பதில்கள்

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியின் மேனாள் வரலாற்றுத்துறை பேராசிரியர்  சா. விஸ்வநாதன் அவர்களுக்கு



5. நாடிலியின் பாதக் குறிப்புகள்
கதைஞர் ஹெச். ஜி. ரசூல் அவர்களுக்கு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புகழ் என்ன செய்யும்?

தெக்கணமும் அதிற்சிறந்த @அண்டனூர் சுரா