புகழ் என்ன செய்யும்?
புகழுக்காகவா எழுதுகிறேன்?
@அண்டனூர் சுரா
நானும் அவரும் ஒரு காலக்கட்டத்தில் எழுதத் தொடங்கினோம். அவர் இரண்டு நூல்களோடு எழுதுவதை நிறுத்திக்கொண்டார். மொழி அடர்த்தியாக எழுதக்கூடியவர். சமீபத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு நேரிட்டது. அவரிடம் கேட்டேன், "அன்பரே, நன்றாகத்தானே எழுதிக்கொண்டிருந்தீர்கள். நீங்கள் எழுதிய நூல்களின் மூலமாக அறியப்பட்டீர்கள். ஏன் எழுதுவதை நிறுத்திக்கொண்டீர்கள்?”அவர் அமைதியாக இருந்துவிட்டு சொன்னார். "நிறுத்திவிட்டேன். நீங்கள் தொடர்ந்து எழுதுகிறீர்கள். புகழுக்காக எழுதுகிறீர்கள் " என்றார்.
அவரது பதில் எனக்கு வியப்பளித்தது. "ஓர் எழுத்தாளன் எழுதுவது புகழுக்காகவா? புகழ் என்ன கிரீடமா, இல்லை உயிரைக் காக்கும் கவசமா?" அவரிடம் கேட்டேன்.
அவர் முகத்தை எங்கேயோ வைத்துக்கொண்டு, "ஆமாம், பிறகு எதற்கு நீங்கள் எழுதுகிறீர்கள்?" என்று கேட்டார்.
நான் ஏன் எழுதுகிறேன் என்பதை விடவும் புகழின் ஆபத்து குறித்து அவருக்குப் புரியவைக்க நினைத்தேன். "புகழ் கழுதைப்புலிக்கு ஒப்பானது தெரியுமா?" கேட்டேன்.
"எப்படி?" என்றார்.
"திருவிவிலியம் வாசித்திருக்கிறீர்களா?"
"ஆம், தினமும் வாசிக்கிறேனே"
"திருவிவிலியத்தில் முதல் கொலை எப்பொழுது நடக்கிறது? எதனால் நடக்கிறது? யார் யாரைக் கொல்கிறார்கள்?"
அவர் சொன்னார், "நான்காவது பக்கத்திலேயே கொலை நடந்துவிடுகிறது" என்றவர் அதிலிருக்கும் கதையைச் சொன்னார். "காயின், ஆபேல் இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்கள். காயின் மூத்தவன். ஆபேல் இளையவன். ஆபேல் ஆடு மேய்க்கிறான். காயின் நிலத்தைச் சீர்த்திருத்தி வெள்ளாமை செய்கிறான். காயின் நிலத்தில் விளைந்த ஒரு பகுதியை கடவுளுக்குக் காணிக்கையாகப் படைத்தான். ஆபேல் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொடுத்தான். இருவர் காணிக்கைகளையும் ஏற்றுக்கொண்ட கடவுள் ஆபேலயும் அவனது காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்.
ஆபேல் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று புகழடைந்தான். இதனால் பொறாமையும் கோபமுமடைந்த காயின் கோபத்திற்கு உள்ளானான். ஒரு நாள் ஆசை வார்த்தைக்கூறி ஆபேலை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று காயின் சொந்த சகோதரனையேக் கொன்றான்."
“இந்தக் கதையிலிருந்து என்ன தெரியவருகிறது?”
"புகழ் ஆபத்தானது."
"இப்பொழுது சொல்லுங்கள். புகழுக்காகவா நான் எழுதுகிறேன்?”
அவர் அமைதியாக இருந்துவிட்டு, "அதெல்லாம் இருக்கட்டும். புகழை எப்படிக் கழுதைப்புலியோடு ஒப்பிட்டீர்கள்?" கேட்டார்.
நான் சொன்னேன், "தன் இனத்தையே வேட்டையாடும் ஒரே இனம் கழுதைப்புலிதான். அதுமட்டுமன்று. மற்ற விலங்குகள் தன்னைவிட வலிமை குறைந்த விலங்குகளை வேட்டையாடும். கழுதைப் புலி அப்படியன்று. தன்னைவிட 'கொழு கொழு'வென்றிருக்கும் தன் இனத்தையே அது வேட்டையாடும் .”
அவர் நான் சொன்னதை ஆமோதித்ததைப் போல சொன்னார், "ஆமாம், வலிமையானவை வலிமையற்றதை வேட்டையாடினால் அது பசி. வலிமையற்றவை வலிமையானதை வேட்டையாடினால் அது பொறாமை.”
இருவரும் பேசிக்கொண்டு நடந்தோம். "சமீபத்தில் என்ன வாசித்தீர்கள்?" என்று கேட்டார்.
என்னைப் பிரபலமாக்குங்கள் (மேக் மி பேமஸ் " எனும் ஆங்கில நாவல் 'மௌட் வென்ச்சுரா' எழுதியது என்றேன்.
"என்ன கதை?"
"பிரெஞ்சு-அமெரிக்க பாடகரான கிளியோ லூவென்ட் எனும் கதாபாத்திரம் தன் குரல் வளத்தால் 32 வயதிற்குள் புகழின் உச்சிக்குச் சென்றுவிடுகிறார். அந்தப் புகழில் தன்னைச் சுற்றிலும் புகழ் கோட்டைக்கட்டிக்கொண்டு தனியே வாழ்கிறார். அவருக்கு அவரே கட்டிக்கொண்ட புகழ்க் கோட்டை ஒரு கட்டத்தில் அவரை மிருகத்தனமாக மாற்றுகிறது. அவர் ஓரிடத்தில் இப்படியாகச் சொல்கிறார். புகழ் ஒரு கொடூரமான அரக்கன். அதைத் தேடி சென்றேன். மிகுந்த புகழ் எனக்குள் ஒரு மிருகத்தனமான, இரக்கமற்ற ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டது."
புகழின் கோரமுகத்தை உள்ளூர உணர்ந்துகொண்ட அவர் ஒரு பெட்டிக்கடையில் ஒரு சிகரெட்டை வாங்கி பற்றவைத்தார்.
"இந்தக் கர்மத்தை ஏன் புகைக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
"பழகிவிட்டேன், விட முடியவில்லை" என்றார்.

கருத்துகள்
கருத்துரையிடுக