தமிழ் ஷேக்ஸ்பியர்

 தமிழ் ஷேக்ஸ்பியர்


சுந்தரம் பிள்ளை கேரளத்தில் பிறந்தவர். அன்றைய திருவிதாங்கூரின் முக்கிய துறைமுகப் பட்டினமான ஆலப்புழையில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் பெருமாள் பிள்ளை - மாடத்தி அம்மாள். தந்தையார் துணி வியாபாரம் செய்துவந்தார்.

ஆலப்புழையில் தமிழ்ப் பள்ளியில் படித்த சுந்தரம் பிள்ளைக்கு திருவிதாங்கூர் சமஸ்தான அரசு மாதம் எட்டு ரூபாய் கல்வி உதவித்தொகை கொடுத்து ஊக்குவித்தது. இந்த உதவித்தொகை இவருக்கு இளங்கலை பட்டம் பெறும் காலம் வரைக்கும் கொடுக்கப்பட்டது. திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் முதல் மாணவராகவும் அன்றைய சென்னை மாகாணத்தில் நான்காவது மாணவராகவும் இளங்கலையில் தேறினார்.

சுந்தரம் பிள்ளை தாய்மொழியான தமிழுடன் ஆங்கிலம்,  சமஸ்கிருதம் மற்றும் மலையாளத்தில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார். தத்துவம், சமயம், வரலாறு இவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.  அன்றைய திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியின் முதல்வராக இருந்த ரோஸ் அவர்கள் அக்கல்லூரியிலேயே வரலாறு, தத்துவ இயல் கற்பிக்கும் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். பிறகு திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். தத்துவத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற சுந்தரம் பிள்ளை, விசாகம் திருநாள் மன்னரிடமிருந்து உதவித் தொகை பெற்று தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் புத்தகமாக வெளியிட்டார்.

அதன்பின் மன்னர் அவரை அரண்மனையின் நிர்வாகப் பணியில் அதிகாரியாக நியமித்தார். அந்தப் பதவியில் இருந்துகொண்டே திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். முனைவர் பெர்னெல், கால்டுவெல்,  நெல்சன் ஆகியோர் சைவ சமய நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தரின் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு என்று கணித்திருந்தனர். கல்வெட்டுகள் , செப்பேடுகள்,  தமிழ் பக்தி இலக்கியம், வரலாறு இவற்றின் துணையுடன் திருஞானசம்பந்தரின் காலம் எட்டாம் நூற்றாண்டிற்கும் முந்தையது என்று சுந்தனரார் நிரூபித்தார்.

வடமொழி இலக்கியமான சௌந்தர்யலஹரியில் ஆதிசங்கர் தேவியிடம் ஞானப்பால் குடித்த திராவிடச் சிசு என்று சம்பந்தரைக் குறிப்பிட்டுள்ளார்.  இதையும் சுந்தரனார் கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்.

சுந்தரனார் திருவனந்தபுரம் நகரில் சைவப் பிரகாச சபையை நிறுவி நகரத்தின் மையப் பகுதியான புத்தன் சந்தை என்ற இடத்தில் சபைக்காக ஒரு கட்டடத்தைக் கட்டிமுடித்தார்.  அது சைவத்தையும் தமிழையும் இன்றைக்கும் வளர்த்து வருகிறது. வெள்ளைக்காரர்கள் மட்டுமே கல்லூரிப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட காலகட்டத்தில் சுந்தரம் பிள்ளை சென்னை மாகாணத்தின் முக்கியக் கல்லூரிகளில் ஒன்றான திருவனந்தபுரம் மாமனார் கல்லூரியில் தத்துவத்துறை முதன்மைப் பேராசிரியராக நியமனம் பெற்றார்.

மனோன்மணியம் நாடகத்தில் இடம்பெற்ற நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் 1970 நவம்பர் 23 அன்று தமிழக அரசின் மாநிலப் பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

சுவாமி விவேகானந்தர் திருவனந்தபுரம் மன்றத்தில் பேசும்போது, ஆரியர்கள்- திராவிடர்கள் குறித்து விவேகானந்தருக்கும் சுந்தரனாருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டு பிறகு இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். சுந்தரம் பிள்ளையை முன்னதாகவே சந்தித்திருந்தால் சைவ சமயம் பற்றிய தெளிவு எனக்கு முன்னரே கிடைத்திருக்கும்  என்று சுவாமி விவேகானந்தர் தனது வாழ்க்கை வரலாறு நூலில் பதிவு செய்திருக்கிறார்.

பெரும் செல்வந்தராக வாழ்ந்த தமிழ் ஷேக்ஸ்பியரான சுந்தரனாருக்கு ஆலப்புழையில் சொந்தமாக பெரிய மாளிகை இருந்தது. உயிரினங்களின் வளர்ச்சிக் கொள்கையை வகுத்த இயற்பியல் அறிஞர் சார்லஸ் டார்வினின் நண்பர் சுந்தரனார். கடிதங்கள் மூலம் வளர்ந்த நட்பு.

சுந்தரனாரின் ஒரே மகன் நடராஜன் பிள்ளை , கேரளா அரசியலில் முத்திரை பதித்தவர். நாடாளுமன்ற உறுப்பினர். திருவிதாங்கூர் அரசின் ஆலோசகர். சட்டமன்ற உறுப்பினராகச் செயலாற்றியவர். மூணாறு சுற்றுவட்டாரத்தில் அரசு நிலங்களை தனியார் நிறுவனங்கள் பல ஆக்கிரமித்திருந்தன.  அந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்தவர். பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியதால் நடராஜன் பிள்ளைக்குச் சொந்தமான நூறு ஏக்கர் நிலத்தை அன்றைய மன்னராட்சி எடுத்துக்கொண்டது.  சுதந்திரத்திற்குப் பிறகு அரசு அந்த நிலங்களை வழங்க முன்வந்தபோது,  அந்த நிலங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுவிட்டன. அவற்றைத் திரும்ப பெற மாட்டேன் என்று நடராஜன் மறுத்துவிட்டார். சுந்தரனாரின் குடும்பம் பாரம்பரியம் நடராஜன் மூலமாகத் தெரியவர கேரளம் திகைத்துப் போனது.

இக்கட்டுரை ஆனந்த விகடன் 06.11.2024 அன்று பிஸ்மி பரிணாமன் எழுதியது.

ஓவியம் - ஹாசிப்கான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புகழ் என்ன செய்யும்?

தெக்கணமும் அதிற்சிறந்த @அண்டனூர் சுரா

எனது நூல்களும் சமர்ப்பணமும்