பாரினில் கொடியது!
ஏப்ரல் 13 - ஜாலியன் வாலாபாக் படுகொலை நாள்.
கிரேக்க நாட்டை சீசர் என்றொரு மன்னன் ஆண்டு வந்தான். அவன், குற்றவாளிகளுக்கு நிறைவேற்றும் மரணத் தண்டனையைப் பொது மக்கள் பார்த்து ரசிக்க ஒலிம்பியா கிராமத்தில் மைதானத்துடன் கூடிய ஓர் அரங்கம் அமைத்தான். நீண்ட காலம் மரண தண்டனை நிறைவேற்றுமிடமாக இருந்த அந்த அரங்கம், ஒரு காலத்திற்குப் பிறகு சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தும் ஒலிம்பிக் மைதானமாகிப் போனது. பஞ்சாப், அமிர்தசரஸ் நகரில் பண்டிதர் ஜாலியன்வாலா என்னும் ஒரு செல்வந்தர் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக, ஒரு தோட்டம் அமைத்தார். அந்தப் பூங்கா ஒரு காலத்திற்குப் பிறகு, கொடுங்கோள் ஆட்சியாளர்களால், பொதுமக்களைக் கொன்று குவிக்கும் கொலைக் களமானது. நாம் ஒன்றை எழுதுகிறோம், வரலாறு ஒன்றை எழுதிக் கொள்கிறது!
ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் தவிர்த்துவிட்டு, இந்திய
சுதந்திரப் போராட்டத்தை எழுதிவிட முடியாது. சுதந்திரப் போராட்டத்திற்காக பஞ்சாப்
கொடுத்த உயிரின் விலை மிக அதிகம். அச்சம்பவம்
நடந்தேறிய நூறாவது ஆண்டு நினைவு நாளில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஜாலியன் வாலாபாக்
சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்கும் வரைக்கும் அம்மண்ணின் ஈரப்பதம் இரத்தமும் சகதியுமாகவே
இருந்தது.
இப்படுகொலைக்கு எதிரான குரல் இந்தியாவில் மட்டுமல்ல, அட்ச –
தீர்க்கக் கோடுகளைக் கடந்து உலகம் முழுவதும் உரக்க ஒலிக்கவே செய்தது. ‘ பஞ்சாப் படுகொலை பாரினில் கொடியது’ என்கிற பாடலையும், ‘போலிஸ்
புலிகூட்டம், நம் மேல் போட்டு வருது கண்ணோட்டம்’ என்கிற பாடலையும், நாடகம் அரங்கேற்றம்
மேடைகள் தோறும் பாடி சுதந்திர கனலை மூட்டினார், என். என். விஸ்வநாத தாஸ் அவர்கள். அதற்காக
அவர் தேச விரோதி எனப் பிரிட்டிஷாரால் முத்திரை குத்தப்பட்டார்.
அந்தப் படுகொலை குறித்து விசாரிக்கப் பிரிட்டிஷ்
ஆட்சியாளர்களால், ஹண்டர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தில்
சாட்சியம் அளிக்கச் சென்ற ஆர். ஈ.எச். டயர், இறந்தோர் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டதா, என்கிற ஆணையத்தின்
கேள்விக்கு அதையெல்லாம் செய்வது என் வேலை அல்ல, என்று திமிருடன் பதிலளித்தான். காயமுற்றவர்கள்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்களா, எனக் கேட்டதற்கு, காயமுற்றவர்கள் யாரும்
மருத்துவ உதவி கேட்கவில்லை, என்றான். காயமுற்ற குழந்தைக்கு மருத்துவ உதவி கேட்கத்
தெரியுமா, குழந்தைக்கு அரசுதானே தேடி மருத்துவ உதவி செய்ய வேண்டும், செய்தீர்களா?
என்கிற கேள்விக்கு ஒரு பதிலும் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போய் நின்றான். ஹண்டர்
விசாரணை ஆணையத்தால் விசாரணை நடந்தது. ஆனால் விசாரணைக்குப் பிறகு டயருக்கு எந்தவொரு
தண்டனையும் கொடுக்கவில்லை, என்பதை உலக நாடுகள் கவனித்து வந்தன.
இரண்டாம் உலகப் போர் முடிவுக்குப் பிறகு, உலக அமைதியை
நிலைநாட்டும் பொருட்டு, ஐக்கிய
நாடுகளின் சபை அமெரிக்கா மேன்ஹட்டன் தீவு, நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது. இதன்
ஆளுமையின் கீழ் இயங்கும் சர்வதேச நீதிமன்றம், பிரிட்டன் தலைநகர் இலண்டன்
நகரில் நிறுவப்படுவதாக இருந்தது. ஆனால், ஐநா சபை உறுப்பின
நாடுகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. இந்தியக்
காலனியத்தில் பிரிட்டிஷார் நடத்திய ஜாலியன்
வாலாபாக் படுகொலைக்குப் பிறகு, அப்படுகொலைக்குக் காரணமானவர்களின் மீது அந்நாடு முறையான நீதி விசாரணை
நடத்தவில்லையென்றும், அப்படுகொலையை நடத்திய அதிகாரிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக்
கொண்டார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இலண்டன் நகரில்
அமைக்கப்படுவதாக இருந்த சர்வதேச நீதிமன்றம், நெதர்லாந்து நாட்டிலுள்ள திஹேக் நகருக்கு மாற்றப்பட்டது.
ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவம் நடைபெற முக்கிய காரணமாக இருந்தது, ரௌலட் சட்டம்.
இச்சட்டம், சிட்னி ரௌலட் என்கிற ஆங்கிலேய நீதிபதியின் வழிகாட்டலின் பேரில்
உருவாக்கப்பட்டது. இச்சட்ட வரைவுக்
குழுவின் தலைவராக இருந்தவர், சர் சிட்னி ரெளலட். இச்சட்ட
வரைவின் செயலர் டி.
வி. ஹோட்ஜ். இதன்
உறுப்பினர்களாக இருந்தவர்கள் சர் பேசில் ஸ்காட், திவான் பகதூர் சி. வி. குமாரசாமி சாஸ்திரி, சர் வெர்னி லோவெட், பி. சி. மிட்டர்
போன்றவர்கள். நீதியரசர் சிட்னி ரௌலட்
தலைமையில் உருவாக்கப்பட்ட சட்டம் என்பதால், அச்சட்டத்திற்கு ரௌலட் சட்டம், என்று
பெயர்ச்சூட்டப்பட்டது.
ரௌலட் சட்டம் உடனடியாக அவசரம் அவசரமாக இயற்றுவதற்குப் பல காரணங்கள்
இருந்தன. முதல் உலகப்போர் காலத்தில் இந்தியச் சுதந்திர போராட்டம், புதிய பரிமாணம் எடுத்தது. 1913 ஆம் ஆண்டு கனடா வாழ் இந்தியர்கள் கதர் ( கிளர்ச்சி
) போராட்டத்தைத் தொடங்கினர். கதர் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்காகக் கதர் எனும் பெயரில் ஒரு இதழ் தொடங்கப்பட்டது. அந்த இதழில்,
“ இதோ, இன்று தொடங்குகிறது பாரத மண்ணுக்கு வெளியிலிருந்து பிரிட்டிஷ் அரசுக்கு
எதிரான போர்! எங்கள் பெயர் கதர் (கிளர்ச்சி). எங்கள் தொழில் கதர். இதன் நோக்கம் பூர்ண சுதந்திரம். இந்தச் சுதந்திரத்தைக் கதர் மூலமே பெறுவோம்”
என்கிற வாசகத்துடன் தொடங்கப்பட்ட இதழ் பிரிட்டிஷாரைக் கோபமூட்டியது.
இந்தக் கிளர்ச்சியைத் தொடர்ந்து 1915 ஆம் ஆண்டு இந்திய முஸ்லீம்களின் சுதந்திரப் போராட்டத்தை ஆதரிக்கும் பொருட்டு துருக்கியில் கிலாஃபத் இயக்கம் தொடங்கப்பட்டது. உலக முஸ்லீம்களின் தலைவரான கலீஃபா இப்போராட்டத்தைத்
தலைமையேற்று நடத்தினார். அந்தப் போராட்டத்தை ஒழுங்குபடுத்தும்
விதமாக ஆர்மி ஆஃப் காட் ( ஈசன் படை) தோற்றுவிக்கப்பட்டது. அந்த போராட்டத்தை இந்திய முக்கிய தலைவர்கள் பெரிதும் ஆதரித்தார்கள்.
இதற்கிடையில் முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டால் போர் முடிந்த பிறகு சுதந்திரம் வழங்குவதைப் பற்றி
அரசு பரீசிலிக்கும் என்று பிரிட்டிஷார்கள் வாக்குறுதியளித்தார்கள். இதற்கு இந்தியாவில் பரவலாக எதிர்ப்பு இருந்தாலும் பஞ்சாப் பகுதிகளில் மறைமுகமாகப் பிரிட்டிஷ் போர்ப் படைகளுக்கு பலம் சேர்க்கும் விதத்தில் இந்தியத் தலைவர்கள் ஆட்களைத் திரட்டிக் கொடுத்தார்கள். ஆனால் பிரிட்டிஷார்கள்
உலகப் போர் முடிந்ததற்குப் பிறகு வாக்குறுதியை
உதாசீனப்படுத்தினார்கள். எனவே இந்திய முக்கிய நகரங்களில் போராட்டம் வெடித்தது. குறிப்பாகப் பஞ்சாப் பகுதியில் அப்போராட்டம்
அதிதீவிரம் கொண்டது.
இந்திய தலைவர்களின் சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்கும் பொருட்டு, 1917 டிசம்பரில் பிரிட்டிஷ் அரசாங்கம், “ராஜத்துரோக விசாரணைக் குழுமம்“ அமைத்தது. அக்குழுமம், சுதந்திரப் போராட்டம் குண்டர்களின் கலகப் போராட்டம் என்றும், கொலை, கொள்ளையில் அதீத நம்பிக்கை
கொண்டவர்கள் என்றும் முத்திரை குத்தியது. இப்போராட்டத்தை ஆதரிக்கும் பத்திரிக்கைகள் முழுமையாகத் தடை செய்யப்படும் என மிரட்டல் விடுத்தது. இதன் கீழ் பல சட்டங்கள் இயற்றப்பட்டன. அதில் ஒரு சட்டம் “ வக்கீல் கிடையாது, அப்பீல் கிடையாது, விடுதலை கிடையாது”.
இச்சட்டம்
1919 ஆம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய சட்டசபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சபை
உறுப்பினர்கள் இச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க, ஒருவர் மட்டும் அச்சட்டத்தை
எதிர்த்து வாக்களித்தார். அவர் சர். சி. சங்கரன் நாயர் அவர்கள். இவர் அச்சட்டத்தை
எதிர்த்து வாக்களிக்கக் காரணம் இருந்தது. 1908 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெறுகையில்,
மெட்ராஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். மக்களின் உரிமையைத் தடுக்கும்
பொருட்டு, திருநெல்வேலி பிரித்தானிய பிரிட்டிஷ் அரசு முன்னெடுத்த ஒடுக்குமுறையே
திருநெல்வேலி கலவரத்திற்குக் காரணம், என்பதை அறிந்தவராக இருந்தார். மேலும் கப்பலோட்டிய
தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய ஐயர் இருவருக்கும் ஏ. எஃப் பின்ஹே பிறப்பித்த கொடுங்காவல் சிறைத்
தண்டனைகள் முறையே நாற்பது ஆண்டுகள், பத்து ஆண்டுகள் தண்டனைக்கு இடைக்காலத் தடை
விதித்தவர் இவரே. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஆஷ் படுகொலை நடந்தேறியதற்குப் பிறகு, திருநெல்வேலி
சதி வழக்காக விசாரிக்கப்படுகையில், மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக
இருந்தார்.
ஓர் ஆங்கிலேய நீதிபதியின் பெயரால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம்,
மக்களைக் கொன்று குவிக்கும் சட்டமாக எய்துகையில், அந்த நாட்டில் அமையப் பெறும்
நீதிமன்றத்தின் மூலம், எப்படி சர்வதேச நீதியை எதிர்பார்க்க முடியும், எனக்
கேள்வியை உலக நாடுகள் எழுப்ப, சர்வதேச நீதிமன்றம் அமையப் பெறும் பெருமையை
பிரிட்டன் இழந்தது.
ரௌலட் சட்டம் சட்டமான மறுமாதம், 1919 மார்ச் 21 அன்று, அமிர்தசரஸ் நகரிலிருந்து வெளியான “வக்த்“ எனும் வாரப்
பத்திரிக்கையில், ஒரு கேலிச்சித்திரம்
பிரசுரமானது. அந்த சித்திரத்தின் உள்ளடக்கம் இதுதான். “ பிரிட்டனின் செகரடரி ஆஃப் ஸ்டேட் ஃபார் இண்டியா, இந்தியாவிற்கு விடுதலைப்
பதக்கம் அளிக்க வருகிறார். அப்போது ரௌலட் தன் பையைத் திறக்க அதிலிருந்து பதக்கத்திற்குப்
பதில் பாம்பு ஒன்று வெளி வருகிறது. பாம்பை ரௌலட் இந்தியா மீது ஏவுகிறார்“. இந்தச் சித்திரம்
பஞ்சாப் முழுமைக்கும் அச்சடித்து ஒட்டப்பட்டது. அது பஞ்சாப் லெஃப்டினென்ட் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ டயரை கோபமூட்டச் செய்தது. உடனே அவன் ராஜத்துரோக விசாரணைக்குழு பரிந்துரைத்த சரத்துகளில் ஒன்றான விசாரணையின்றி கைது செய்து, சிறையில் அடைத்தல் ஷரத்தை தனி
சட்ட வடிவமாக்கினார். அதுதான் ரௌலட் சட்டம்.
இது ஒரு புறம் இருக்க, மார்ச் 29 அன்று சத்யபால் தலைமையில் அமர்தஸரசில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் டாக்டர் கிச்லூ ரௌலட் சட்டத்தை எதிர்த்து உரையாற்றினார். அந்தப் பொதுக்கூட்டத்தைப்
பிரிட்டிஷ் அரசு கலைக்க முற்பட, கலவரம் மூண்டது. அதில் எட்டுபேர் பலியானார்கள்.
ஏப்ரல் 5 அன்று பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ டயர் சத்யபால் , கிச்லூ பொதுக்கூட்டத்தில் பேசக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்தார். தடை உத்தரவை மீறி பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஏப்ரல் 7 அன்று காந்தியடிகள் சத்தியாக்கிரகி என்னும் பெயரில்
ஒரு பத்திரிகைத் தொடங்கினார். அந்தப் பத்திரிகை உடனே தடை செய்யப்பட்டது. ஏப்ரல் 9 அன்று ராம நவமி தினம். அன்றைய தினத்தைப் பஞ்சாப் வாழ் இந்து – முஸ்லீம் மக்கள் “ நாட்டின் ஒற்றுமை தினம்“ எனக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்த ஒற்றுமையைக்
கண்டதும் லெஃப்டினெண்ட் கவர்னர் ஓ டயர் டாக்டர் கிச்லூ, சத்யபாலையும் கைது செய்ய ஆணைப்பிறப்பித்தார். இதனால் பஞ்சாப் நகரில் கலவரம் வெடித்தது.
அன்றைய பஞ்சாப் டெபுடி கமிஷனர் இர்விங்க் கலவரத்தை ஒடுக்க துப்பாக்கிச்சூடு நடத்தினான். அதில் இருபது பேர் மரணமுற்றார்கள். அடுத்த நாள் ஒரு கறுப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அது மார்ஷல் சட்ட விதி. அதன்படி ஒரு சடலத்தை அடக்கம் செய்ய நான்கு பேர்க்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது. மீறி கலந்து கொண்டால்
சட்டத்தை மீறியதாக கருதி முன் அறிவிப்பின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்படும். ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ முக்கிய காரணமாக இருந்தது இந்த மார்ஷல் சட்ட விதிதான். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த பிறகு சாலைகளில் வயிற்றால் ஊர்ந்துதான் பயணம் செய்ய வேண்டும் எனும் அளவிற்கு அந்த சட்ட விதி கடுமையாக்கப்பட்டது.
ரௌலட் சட்டத்தை எதிர்த்து நிகழும் போராட்டத்தை மார்ஷல் விதி கொண்டு ஒடுக்க ஒரு திறமைமிக்க ஒரு இராணுவ அதிகாரி தேவைப்பட்டார். அதற்காகப் பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ டயரால் வரவழைக்கப்பட்டவன்தான் பிரிகேடியர் ஜெனரல் ஆர். ஈ.எச். டயர்.
ஏப்ரல் 12 அன்று அமிர்தசரஸ் நகரம் ஜெனரல் டயர் கட்டுப்பாட்டின்
கீழ் வந்தது. அவன் மார்ஷல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டினான். ஏப்ரல்13, அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை. சீக்கியர்களின் முக்கிய குருவான கோவிந்த் சிங் சீக்கிய அறப்படைக்கு அடிக்கல் நாட்டிய நாள் அது. அன்றைய தினம் பஞ்சாப் விழாக்கோலம் கொண்டிருந்தது. ஜெனரல் டயர் அவனது இராணுவ படையின் மூலம் ஜாலியன் வாலா தோட்டத்திற்குள் நுழையத் தடை விதிப்பதாகப் பிரச்சாரம் செய்தான். மறுபுறம் பிரிட்டிஷ் அரசிடமிருந்து முக்கியமான கடிதம் ஒன்று டாக்டர் கீச்லூவிற்கு வந்திருப்பதாகவும், அதை இன்றைய கூட்டத்தில் வாசிக்கப்படும் என்றும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தின்
சாரம்சத்தை அறிந்துகொள்ளும்
பொருட்டு மக்கள் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் நிரம்பி வழிந்தார்கள். அன்றைய தினக் கூட்டம் ரௌலட் சட்டத்திற்கு எதிரான கூட்டம் அல்ல.
ஜாலியன் வாலாபாக் தோட்டம் ஐந்தடி உயரச்சுவரும், நான்கு குறுகிய வழியும், அதன் மையத்தில் ஒரு சமாதியும், அதன் அருகில் ஒரு திறந்த கிணறும் கொண்டது. அதற்குள் எந்தவொரு பெரிய வாகனமும் செல்ல முடியாது. ஜெனரல் டயர் ஐம்பது இராணுவ வீரர்களுடன் மைதானத்திற்குள்
நுழைந்தான். பிரிட்டிஷ் இராணுவம் மார்ஷல் சட்ட விதியின் கீழ் முன் அறிவிப்பின்றி, தோட்டாக்கள் தீரும் வரை துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
அந்த படுகொலை பார்த்த நேர் முக வர்ணனையாளர் ஆர்தர் ஸ்வின்ஸன் இரண்டாயிரம் பேர் இறந்ததாகச் சுட்டிக்காட்டினார். ஆனால் பிரிட்டிஷாரின் டெய்லி ஹெரால்டு பத்திரிக்கை நானூறு பேர் மட்டுமே மரணம் என்றும், 1500 பேர் காயம் என்றும் செய்தி வெளியிட்டது. காந்தியடிகள், வைஸ்ராய்க்கு கடிதம் எழுதினார். அதன் பிறகுதான் இப்படியான
ஒரு படுகொலை நடத்தப்பட்டிருப்பது பிரிட்டன் தலைமையிடத்திற்குத் தெரிய வந்தது. படுகொலை பற்றிய அறிக்கையுடன் ஜெனரல் டயர் உடனடியாக திரும்ப அழைத்துக்
கொள்ளப்பட்டான். ஆனால், தண்டனையிலிருந்து தப்பித்துக்
கொண்டான்.
எழுத்தாளர் அண்டனூர் சுரா
கருத்துகள்
கருத்துரையிடுக