பெருவலிப் பாதை
கழுதைப்பாதை ( நாவல் )
ஆசிரியர் – எஸ். செந்தில்குமார்
வெளியீடு – எழுத்து
விலை - 375
‘கழுதைகள் இப்படித்தான் நாடாளுமன்றத்தில் இடம் பிடித்தன’ புலம் பெயர் ஈழ எழுத்தாளர் எழுதிய சிறுகதை ஒன்று உயிர் எழுத்து இதழில் வெளியாகியிருந்தது. அக்கதையை எழுதிய ஆசிரியர் பெயர் அதில் இடம் பெற்றிருக்கவில்லை. காரணம், கதையின் தலைப்பு மட்டுமல்ல, கதையும் அப்படி.
பிஸ்மார்க் இவ்வாறு ஜெர்மனி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். ‘இங்கே கூடியிருப்பவர்களில் பாதி பேர் கழுதைக்கு சமமானவர்கள்’ என்று. உரைக்கு எதிர்ப்பு கிளம்பியது. பிஸ்மார்க் உரையை இவ்வாறு திரும்பப்பெற்றுக்கொண்டார், ‘ இங்கே கூடியிருப்பவர்களில் பாதிபேர் கழுதைக்குச் சமமல்ல’. உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்த வசனம் சமீபத்தில் சர்க்கார் திரைப்படத்தில் இடம்பெற்றது.
அறிவுசார் மட்டத்தில் கழுதைக்கென ஓரிடமிருக்கிறது. எள்ளல், பேதமை,மடன் இவற்றின் குறியீடு கழுதை. உழைப்பைக் கொண்டு அறிவைப் பார்க்கும் இச்சமூகத்தில், அறிவால் உழைப்பைப் பார்ப்பதில்லை. அப்படியாகப் பார்ப்பவர்களுக்கே தெரியும் உழைப்பின் குறியீடு கழுதை என்று. தன்னை விடவும் பல மடங்கு எடையைச் சுமக்கக்கூடிய இந்த ஜீவன், தன்னை வளர்த்த எஜமானனை விட்டு பிரிகையில், பிரிந்த எஜமானின் குரலைக் கேட்கையில், தன்னைச் சுற்றிலும் தீ வட்டம் கட்டுகையில், கழுதை அவற்றை எப்படியாக எதிர்கொள்கிறது என்பதே கழுதைப்பாதை எனும் இந்நாவல். முந்நூறு கழுதைகளை வாழ்வதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் மூவண்ணா, அவ்வளவு கழுதைகளையும் நெருப்புக்குத் தின்னக் கொடுத்துவிட்டு, நிர்கதியாய், ஏதிலியாய், இடத்தை விட்டு புலம் பெயரும் நெஞ்சுக்கூடற்ற வாழ்வைப் பேசுகிறது.
காப்பி விளையும் மலைப்பகுதி, அதை அறுவடை செய்து அடிவாரத்திற்குக் கொண்டுபோய் சேர்க்கும் கழுதைகள், கழுதை போக முடியாத இடத்திற்கு கழுதையைப்போல சுமக்க முடியாமல் சுமந்து செல்லும் கூலி ஆட்கள், பெண்கள் இயற்கை உபாதையைக் கழிக்க முடியாமலும், வரிசையிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் தவிப்பில் வாசிப்பு கனம் பெறுகிறது. வழியினூடே காப்பியை அபகரித்து, செரிக்க நினைக்கும் கள்வர் கூட்டம், அவர்களை எதிர்த்து போராடும் கூலிகளுடன், எஜமானனின் உத்தரவுக்கு பணிந்து கள்வர்களை எட்டி உதைக்கும் கழுதை, என கழுதையின் நடையோடு வாசிப்பின் நடை பின் ஓடுகிறது.
சுப்பண்ணா, மூவண்ணா இருவரும் இரட்டையர்கள். சுப்பண்ணா தங்கம்மாள் தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள். மணிப்பயல், செல்வம். மூவண்ணா அங்கம்மாள் தம்பதிகளுக்கு பிள்ளைப்பேறு இல்லை. அக்காளின் பிள்ளைப்பேறுக்காக, அவளது தங்கை தங்கம்மாள் தனது கணவனின் படுக்கையில் இடம் கொடுப்பதும், போதைக் கலைந்து பார்க்கையில், தன் அண்ணனுக்குத் துரோகம் செய்துவிட்டேனேனென்று இந்த வித்து அவளது மடியில் தங்காது, என சாபம் விடுவதும், அந்த சாபத்தின் நிழல் சாபம் விட்டவரையும்; கணவனுக்குத் துரோகம் விளைவித்தவளையும் சுற்றுகிறது. இப்படியாக பல சாபங்களின் நிழல்கள் இந்நாவலில் உண்டு.
செல்வம், அவனது காதலி கோமதி. அவள் தாழ்ந்த சாதி என்பதால், அவளது காதல் கல்யாணமாக கூடாமல், செல்வம் குடும்பத்தின் அத்துமீறிய தாக்குதலோடு, எதிர்த்துத் தாக்க வலிமையும், பின்புலமுமின்றி வலியோடு பிரிந்துவிடுகிறது. ஆனால், அவளது கற்பும், செல்வத்தை விடவும் நல்ல மாப்பிள்ளையை என்னால் தேர்வுசெய்துக்கொள்ள முடியும், என்கிற நம்பிக்கை கோமதியை வாசகனால் அசைபோட வைக்கிறது. செல்வத்தின் தம்பி மணிப்பயலுக்கு சரசு என்கிற பெண். இவள் பாம்புக்கடிக்கு கணவனைப் பறிக்கொடுத்து நிற்கும் கைம்பெண். காப்பி எஸ்டேட் முதலாளிகள், அவளை அடைய முண்டியடிக்கிறார்கள். அவர்களிடம் சினந்து நிற்கும் சரசு, தன்னை விடவும் இளமையான மணிப்பயலுக்கு படுக்கையிலும், இதயத்திலும், எதிர்காலத்திலும் இடம் கொடுக்கிறாள். என்னைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ளக்கூடாதென வாக்கும் பெறுகிறாள்.
சுப்பண்ணா, அவர் வேலைசெய்யும் முதலாளி, ராசப்பன் செட்டியார் உதவியோடு மகன்களுக்கு மணப்பெண் பார்க்கத் தொடங்க, மணிப்பயல் சரசு முன் வெற்றிலைப் பாக்கு வைத்து, கல்யாணத்திற்கு அழைக்க, அவனையே பார்த்துக்கொண்டிருக்கும் அவள், அவனிடம் கல்யாண வேட்டியைக் கட்டிக் காட்டச்சொல்லி கெஞ்சிக் கேட்க, அவன் நாளை கல்யாணத்து அன்றைக்குத்தான் கட்டுவேன் என சொல்லி அவளிடமிருந்து விடைபெற, விடிந்தால் அவனது கல்யாணம் என்கிற நிலையில், அன்றைய இரவு சரசு தற்கொலை செய்துகொள்கிறாள். சரசு மரணத்தைக் கேட்கும் மணிப்பயல் சரசுவின் நினைவுகளால் பித்துப்பிடித்து, யாருக்கும் தென்படாமல் தொலைந்துபோகிறான். அவனது தொலைவுக்குப்பின்னே ஒரு சாபம் தொற்றி நிற்கிறது. இப்படியாக சாபத்தின் அடர்நிழலாக விரியும் பாத்திரங்களும், சாதியின் பெயரால் கொன்றொழிக்கும் தம்பதி மரணங்களும், அவர்களது மரணத்திற்குப்பிறகு தெய்வச்சாட்சியாக வழிபடுவதுமென போடிபட்டி, முதுவாக்குடி, வக்கப்பட்டி, கொட்டக்குடி, குரங்கணி,..போன்ற மலையின் மேல், கீழ், அடிவார கிராமங்களின் வாழ்க்கைச் சுவடுகளைப் பேசுகிறது.
சில இரட்டைப்பாத்திரங்கள், பாத்திரங்களின் மரணங்கள், காதல்,களவுகள் முந்தைய வாசிப்புப் பக்கங்களை நினைவூட்டினாலும், அச்சம்பவங்கள் நாவலின் கதையோடு இழையோடியும் வேறொரு விதமான வாழ்தலின் பொருளையும் தருவிக்கிறது.
‘இந்த காப்பித்தோட்டத்துக்கும் போடிபட்டிக்காரங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. காப்பித்தோட்டத்தை கண்டுபிடிச்சது அதை உண்டாக்கினது எல்லாம் கர்நாடகத்திலிருந்து வந்த நம்ம தேவாங்கர் செட்டியார் வம்சத்து ஆளுங்கதான். அவங்கதான் காப்பியை இந்தப் பூமிக்குக் கொண்டுவந்து நட்டுவச்சான்கள். போடிபட்டி அரண்மனை திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு பாத்தியப்பட்டது. திருமலை நாயக்கரோட 72 பாளையத்துலே அது கட்டுப்படாது. ஆனால் இன்றைக்கு யார் யாரோ வர்றாங்க. காப்பித்தோட்டத்தை வாங்குறாங்க, பழம் பறிக்கிறாங்க.காசு பணம்ன்னு சம்பாதிச்சிட்டுப் போயிடுறாங்க. இந்த மலை தோட்டத்துக்கு ஆசைப்படாத ஆணும் பெண்ணும் இருக்கா….’
கழுதைப்பாதை, கழுதையின் பாதை மட்டுமல்ல. அதற்குள் மனித பாதையும் அடங்கி இருக்கிறது. அப்பாதை கழுதை சுமக்கும் வலியை விடவும், பெரு வலியைக் கொண்டதாக இருக்கிறது.
- அண்டனூர் சுரா

கருத்துகள்
கருத்துரையிடுக