வரைவு தேசிய கல்விக் கொள்கை - 2019 மீதான ஒரு பார்வை

வளரும் இந்தியா, சக்தி இந்தியா, வல்லரசு இந்தியா.. டிஜிட்டல் இந்தியா என்பது இன்றைய இந்தியாவின் அடையாளங்களாக இருக்கின்றன. கல்விக்காக, மேற்படிப்பிற்காக இந்தியாவிலிருந்து மேனாடு செல்லும் காலம் போய் கல்விக்காக இந்தியாவிற்குள் கால் பதிக்கும் நிலையை நோக்கி இந்தியா முன்னேறியுள்ளதாக புதிய கல்விக் கொள்கையை வரையறுத்திற்கும் கல்வியாளர்கள் கருதியிருக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே புதிய தேசிய கல்விக் கொள்கையின் கலைத்திட்டமும் கொள்கை முடிவும் இருப்பதை முன்வரைவாக வைத்திருக்கும் இயல்களைப் பார்க்கையில் கருத வேண்டியதாக இருக்கிறது.

NEP-2019 மொத்தமுள்ள பதினெட்டு இயலில் இயல் -நான்கிலுள்ள பள்ளிக் கலைத்திட்டமும் ஆசிரியமும் என்கிற பகுதி மாணவர்களின் வயது, நரம்பு, மூளை, உணர்வு, உளவியலுடன் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. இந்த இயலை பெற்றோர் வரைக்குமாகக் கொண்டுச் சென்று விவாதித்தல், விவாதத்தின் அடிப்படையில் சில வரைவுகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை விருப்பு வெறுப்பின்றி ஏற்றல், எதிர்கால தலைமுறையைக் கருத்தில் கொண்டு திருத்தம் செய்தல் மூன்றும் வல்லரசு இந்தியாவை விடவும் நல்லரசு இந்தியாவை உருவாக்க வழிகோலும்.

ஒலிம்பிக் போட்டியை சீனா - பெய்ஜிங் - 2008 ஆம் ஆண்டு நடத்துகையில் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளை போட்டிக்குத் தயார் செய்தது. இத்தயாரிப்பில் குழந்தை மீறல் நடந்தேறியதை உலகம் கண்டு அதிர்ச்சியுற்றது. குழந்தைகள் மீது திணித்தல் என்பது அது தேனாகவே இருந்தாலும் குழந்தையின் மீதான வன்முறைதான்.

பாடப்புத்தகமில்லாத கல்வி, தேர்வில்லாத கல்வி, விருப்பமானக் கல்வி, அனைவருக்கும் இலவசக் கல்வி, அனைவருக்கும் தரமானக் கல்வி, அனைவரும் தேர்ச்சிக்குரிய கல்வி போன்ற எந்தவொரு சாராம்சமற்று தேர்வு அடிப்படையில் ஒவ்வொரு படியாக முன்னேறும் படிநிலை அளவிலான கல்வி என்பது குழந்தை மைய, குழந்தை மனநிலைக்கு உகந்த கல்வி முறையாக இருக்க இயலாது.

இந்திய தேசம் வளர்ந்த தேசம் அன்று. வளரும் தேசம்.  இத்தேசம், வளர்ந்த தேசமாகவே கருதினாலும் கூட கல்வியாளர்கள் எதிர்நோக்கும்படியான குழந்தையின் கற்றல், அறிதல், புரிதல் யாவும் நாம் கணிக்கும் வயதில் துவங்கிவிடுவதில்லை. இந்த வயதில் இதுவெல்லாம் கற்றிருக்க வேண்டும். அப்படியாக கற்காத குழந்தைகள் மீத்திறனற்ற குழந்தைகள் என்கிற முடிவிற்கு வந்துவிடுதல் குழந்தை நலனை விலக்கி வைத்து குழந்தை உலகத்தைக் கட்டமைப்பதாகவே இருக்கும். 

சில குழந்தைகள் குறிப்பட்ட வயதிற்குள் மீத்திறனுடன் காணப்படக் கூடும். இக்குழந்தைகள் விதிவிலக்கான குழந்தைகளாக இருக்கலாமே தவிர பொதுமையாக இருக்க இயலாது. ஆனால் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் படி,

5 வருட அடிப்படை நிலை ( முன்பருவம் 3 ஆண்டுகள், வகுப்பு 1, 2)
3 வருட ஆயத்த நிலை ( வகுப்பு 3, 4, 5)
3 வருட நடுநிலை ( உயர் தொடக்கநிலை 6,7,8)
4 வருட உயர்நிலை ( 9,10, 11, 12 )

இந்த படிநிலையில் முன்பருவக் கல்வி 3 வயதிலேயே துவங்குவது அதிர்ச்சியளிக்கும்படியாக இருக்கிறது. 5 வருட அடிப்படை நிலை என்பதை 3 வருட படிநிலையாக மாற்றி அமைக்க வேண்டும். 

கல்வி, மானுடவியல், அறிவியல், விளையாட்டு ஆகிய துறைகளை அந்தந்த மாணவர்கள் தேர்வு செய்துக்கொள்ள அதிக வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது வரவேற்கத் தக்கது. அதேநேரம் தொழிற்கல்வியையும் புகுத்துவது குலக்கல்வி - குலம் சார்ந்த - சாதியம் சார்ந்த கெட்டித் தன்மையை உருவாக்கும் தொழிற்கல்விக்கு இது வழிவகுக்கிறதோ எனச் சந்தேகப்பட இடமிருக்கிறது. தொழிற்கல்வி என்பது விரும்புவதைத் தேர்வு செய்யும் படியாக இருக்க வேண்டும். இருப்பதிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்யும் படியாக இருத்தல் ஆகாது.


மொழி, மொழி சார்ந்த கருதுகோள் - 

இரண்டு வயது முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு பல மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான மிக நெகிழ்வான் ஆற்றல் இருக்கிறது என்பது NEP -2019 கூறுகிறது. இது எதன் அடிப்படையிலான ஆய்வு முடிவு எனத் தெரியவில்லை. இதற்கு முன்பு கோத்தாரிக் கல்விக் கொள்கை மற்றும் முந்தைய தேசியக் கல்விக் கொள்கை எட்டு வயதில்தான் மொழியைச் சரியாகப் பிரித்தறியும் அறிவு துவங்குவதாக கூறியிருக்கிறது. அதாவது நடப்புத் திட்டத்தின் படி மூன்றாம் வகுப்பில்தான் ஒரு சொல் குறித்து மிகச் சரியான விளக்கத்தையும் பொருளையும் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.  வாள் - வால் ; பள்ளி - பல்லி ;  CLASS - GLASS ; TIE - DIE.  ஆனால் NEP -2019  மொழிகளைத் துவக்கத்திலிருந்தே குழந்தைகளிடம் கொண்டுப்போய் சேர்க்க வேண்டும் என்கிறதன் அடிப்படையில் மொழிசார்ந்த அறிவு மூன்று வயதிலிருந்தே துவங்கி விடுவதாக கூறியிருப்பது பெற்றோர் மனநிலையின்படி குழப்பதையும் அதிர்ச்சியையும் தருவிக்கிறது.

பன்மொழி கற்பதால் அறிவு மேம்படும் என்பதும் அறிவாற்றல் வளரும் என்பதும் ஏற்றுக்கொள்ள இயலாத வாதம். பன்மொழித் திறமை என்பது ஒரு வகைத் திறன் (Competency) அவ்வளவே.  அறிவியல் அறிவு என்பது ஒரு வகை பகுப்பாய்வு. எதிர்கால மாணவர்களுக்குத் தேவை இவ்விரண்டு அன்று. அறிவியல் மனப்பான்மை. இதற்கும் பன்மொழிக்கும் எவ்வித தொடர்பும் அன்று. அதே நேரம் அறிவியல் பாடங்கள் இரு மொழிகளில் ( பிராந்திய மொழி, ஆங்கிலம் ) கற்பிக்கப்பட வேண்டும் என்பது வரவேற்கத் தக்கது.

மொழி ஆற்றலும் பன்மொழிக் கொள்கையும் என்கிற தலைப்பின் கீழ் முன் வைக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கை இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதைக் கவனிக்க முடிகிறது. இது குறித்து பேசுகையில் சில செய்திக் கட்டுரை துணுக்குகளைச் சுட்டிக் காட்டத் தோன்றுகிறது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் குறித்த கருத்துப்பகிர்வுகள் , வரைவுகள் குறித்து இந்தியா முழுமைக்கும் பேசும்பொருளாக இருந்த காலத்தின் போது கட்டாயம் என்கையில் உடனடியாக கல்வியோ, சட்டமோ  சட்டென நினைவிற்கு வந்துவிடவில்லை. ஆனால் NEP -2019  இல் மொழி குறித்து பேசுகையில் மும்மொழி என்றதும் இந்தி வேறு வழியில்லாமல் மனதின் முன் வரிசைக்கு வந்து நிற்கிறது. 
மும்மொழிக் கொள்கை, அதில் இந்தி, இந்தி பேசாத மாநிலத்தில் மூன்றாவது மொழி என்கிற நிலைப்பாட்டின் கீழ் கல்வியாளர்களின் கருத்துகளைத் தேடுகையில்  ஜூன் 24, 2019 அன்று தினமணியில் ஜோதிர்லதா கிரிஜாவின் கட்டுரை குறிப்பிடத்தகுந்த ஒன்று. ' இந்தி படித்தால் வேலை கிடைக்குமா?' என்பது அக்கட்டுரையின் தலைப்பு.  இத்தலைப்பு NEP -2019 கருதுகோளுடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் அந்நியப்பட்டுத் தெரிந்தாலும் எக்கொள்கையின் கடைசி இலக்கு படித்த பட்டதாரிகளின் வேலை வாய்ப்புதானே.அதன்படி இத்தலைப்பின் அடிப்படையிலான கருத்துகள் கவனத்தில் கொள்ளத்தக்கதே.
பூகோள ரீதியில் இந்தியாவின் நில அமைப்பை பார்த்தால் வடகிழக்கு மாநிலங்கள் பங்காளதேஷ், சீனா, மியான்மர், நேபாளம் நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. இவர்கள் இந்திய அரசும், அந்தந்த மாநில அரசும் புகட்டும் மொழிகளைக் கடந்து அண்டை நாட்டுன் தொடர்பு கொள்ளும்படியான மொழிகளைக் கற்றிருக்கிறார்கள். அஸ்ஸாம் மாநிலத்தினர் சராசரியாக ஏழு மொழிகள் பேசுவதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இந்த ஏழு மொழியில் இந்தி ஒரு மொழியாக இருக்கவில்லை.

அதேபோன்று கேரளா மாநிலம் துபாய் நாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. இவர்கள் விருப்பத்தின் பேரில் அரபி, உருதுகளை தனியார் பயிற்சி நிறுவனம் வாயிலாக கற்றுக்கொள்ள முனைகிறார்கள். தமிழ்நாடு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா, மாலத்தீவுகளுடன் நெருக்கமான உறவு கொண்டது. ஆகவே ஆங்கிலம், மலாய் மொழிகள் தேவை என்பதாக உணர்கிறார்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் தேவையின் அடிப்படையில் பிரிதொரு மொழியை ஏற்கவும், அங்கீகரித்தும் வந்திருக்கிறது. இதன் அடிப்படையில்தான் நேரு அரசு கொண்டு வந்த அலுவலக மொழி ‘இந்தி’யா,  ‘ஆங்கிலமா’ என்கிற வாக்கெடுப்பில் இரு மொழியும் சம வாக்குகள் பெற குடியரசுத் தலைவர் இந்தி மொழிக்கு தன் வாக்கைச் செலுத்தினார். ராஜாஜி முதலில் இந்தியை ஆதரித்து பிறகு எதிர்க்கும் நிலைப்பாட்டிற்கு உள்ளானதும் இந்த அடிப்படையில்தான். இவரது நிலைபாட்டை ஆங்கில பத்திரிகை ஒன்று INCONSISTENCY IS THE QUALITY OF AN ASS ( அடிக்கடி கருத்தை மாற்றிக்கொள்ளும் கழுதைக்குணம்) என்று எழுதியது.
மற்றொன்று, இந்திரா காந்தி இந்தியை நாடு முழுவதும் கட்டாய மொழியாக அமுல்படுத்த வேண்டும் என முடிவெடுத்ததன் பிறகு தன் மகனை ஆங்கிலம் கற்றுவர வெளிநாடு அனுப்பினார். இதைச் சுட்டிக்காட்டி ஜோதிர்லதா கிரிஜா இந்திரா காந்திக்கு கடிதம் எழுதியது, அதற்கு காந்தி பதிலளிக்காமல் மொழி குறித்த உணர்வை மதிக்கும் பொருட்டு பதில் கடிதம் எழுதியதை தினமணி கட்டுரையாக்கியிருந்தது.
ஜூன் 7, 2019 நாளிட்ட THE HINDU பத்திரிகையில், G.N.DEVY ( charirman, the people's Linguistic survey of India) எழுதிய கட்டுரை பெரிதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.  இக்கட்டுரை இந்தி பரவலாக்கலின் முன்னெடுப்பிலிருக்கும் உள்ளார்ந்த அரசியலைப் பேசியிருந்தது. மொழி என்பது semiotic system என்பதிலிருந்து semantic complexity நோக்கி நகர்வதாக அக்கட்டுரை கோடிட்டுக் காட்டியது. அதாவது குறியியல் வடிவத்திலிருந்து சொற்பொருள் சிக்கலை நோக்கி.

இக்கட்டுரை இரண்டாம் மொழி என்கிற இடத்தில் சில நாடுகளின் தேர்வுகளைச் சுட்டிக்காட்டியது. இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள்  தொடக்கக்கல்வி வரைக்கும் தாய்மொழிக் கல்வியையும் இடைநிலை வகுப்பில்தான் இரண்டாம் மொழியைத் தேர்வுச் செய்து கொள்கின்றன. அமெரிக்காவில் ஆங்கிலம் முதன் மொழி ஸ்பானிஷ் அல்லது வேறொரு இரண்டாம் மொழி. இந்நாடுகளின் இரண்டாம் மொழித் தேர்வு என்பது பனிரெண்டு வயதிற்கும் மேல். ஆனால் இந்தியாவில் மூன்றாவது மொழி திணிக்க நினைப்பது மூன்றாவது வயதில்!
யுனெஸ்கோவின் ( THE UNESCO INSTITUTE AND GLOBAL EDUCATION MONITORING - 2016) புள்ளி விவரத்தின் படி, இந்தியாவில் 47 மில்லியன் மாணவர்கள் பத்தாம் வகுப்புடன் இடை நிற்றலுக்கு உள்ளாகிறார்கள். இதில் அதிகமானோர் மாணவிகள்.  இவர்கள் கழிப்பறை வசதி, வறுமை உட்கோட்டினர், அருகாமை பள்ளி அமையாமை ஆகிய காரணங்களால் இடை நிற்றலுக்கு உள்ளாகிறார்கள். இப்படியானச் சூழலில் மும்மொழி கல்விக்கொள்கை அமலாகும் பட்சத்தில் இடைநிற்றல் மேலும் அதிகரிக்கும் என்கிறார் அக்கட்டுரையாளர். . ஒரு மொழியின் அத்தியாவசிய தேவை மூன்று நிலையின் கீழ் கட்டமைப்படுகிறது. 1. தொடர்பு, 2. அரசியல் 3.  நிர்வாகம். 

இன்றைக்கு இந்தியின் பரவலாக்கல் தேவை என்பது நிர்வாகம் சார்ந்தும், சமஸ்கிருத பரவாக்கல் அரசியல் சார்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. ஒரு திட்டத்திற்கு இந்தியில் பெயர்ச்சூட்டல், ஒரு திட்டத்தை இந்தியில் மட்டும் வெளியிடுதல் போன்றவை இந்தி மீது மற்ற பிராந்திய மொழியினருக்கு சந்தேகம் மற்றும் வெறுப்புகளை நோக்கித் தள்ளுகிறது. உதாரணமாக,  NEP -2019 ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிட்டு அதை எந்தவொரு பிராந்திய மொழியிலும் வெளியிடாமை.

மக்கட்தொகை கணக்கெடுப்பு -2011 இன் படி, 52 கோடிக்கும் மேலானவர்கள் இந்தி மொழி பேசுவதாக புள்ளி விபரம் காட்டினாலும் இந்தியை உள்ளடக்கி பேசக்கூடிய போஜ்புரி 5 கோடி பேர், ஒன்பது கோடி பேர் 61 இந்திக்குடும்பத்துடன் தொடர்புடைய மொழியைப் பேசுவதாக புள்ளி விபரம் சொல்கிறது. மொத்தத்தில் இந்தி பேசுபவர்கள் 30 விழுக்காட்டிற்கும் குறைவுதான். மிச்சமுள்ள  70 விழுக்காட்டினர் இந்தியைத் தவிர்த்து பிற மொழி பேசுபவர்கள். இந்நிலையில்தான் இந்தி என்பது இந்தி பேசாத மாநிலத்தினரின் கட்டாய மொழியாக முன் வைக்கப்படுகிறது.
எந்தவொரு பூர்வீக மொழிக்கும் தெரிந்தே ஆபத்தை விளைவித்தல் ஒரு வகையான இனப்படுகொலை ( an act amounting to genocide ) என்கிறது யுனெஸ்கோ. இவ்வகை நடவடிக்கைக்கு கட்டுரையாளர் ' PHONOCIDE ' என்கிற சொற்பதத்தைப் பயன்படுத்துகிறார். அதாவது தேசியவாதத்தின் மீதான மொழி தாக்குதல் என்று பொருள்.

இது ஒருபுறமிருக்க, பல இன மக்களாக, பல மொழிகளின் தேசமாக இருந்த ரஷ்யாவில் அந்நாட்டை ஆண்ட ஜார் மன்னர் கட்டாய மொழி என்கிற நிலைப்பாட்டை எடுக்கையில் ஜனவரி 18, 1914 அன்று லெனின் எழுதிய கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. துவக்கப் பள்ளிகளிலாவது தாய் மொழிக் கல்வி பயிலும் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் தாராளவாதிகள் பிற்போக்குவாதிகளிடமிருந்து மாறுபடுகிறார்கள். ஆனால், ஒரு கட்டாய ஆட்சி மொழி தேவை என்பதில் அவர்கள் பிற்போக்குவாதிகளுடன் முழுவதுமாக உடன்படுகிறார்கள். இந்த மனநிலைப்போக்குதான் இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல, பெரும்பாலான தென் மாநிலங்களைப் பிடித்து ஆட்டுகிறது.  தேசம் முழுமைக்குமான  கட்டாய மொழி  ஒன்று தேவைதானே?. அதாவது மும்மொழி கல்வித் திட்டத்தில் மூன்றாம் மொழி இந்தி கட்டாயம் எனும் பட்சத்தில் பிறகு அது தேசத்தின் மொழியாக மாறும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. இப்படியான மொழி ஆதிக்கம் அம்மண்ணின் பிராந்திய மொழியைப் பாதிப்பது, மொழியால் தேசத்தின் ஒற்றுமையைப் பாதிப்பது என இருவேறு சிக்கலில் மாநில மொழிகள் இருப்பதைக் கவனிக்க முடிகிறது.
இந்த இடத்தில்  தமிழ் தி இந்து எழுதிய ஒரு  கட்டுரையில், ‘இன்றைக்குள்ள உலக  நாடுகளில் எந்தவொரு நாட்டிலும் கட்டாய மொழியென்று ஒரு மொழி முன்நிறுத்தப்படவில்லை. பெரும்பாலான நாடுகள் அலுவல் மொழி என்கிற அளவிலேயே மொழியைக் கையாளுகின்றன. ஆனால் கட்டாய மொழி என்பதற்கும் அலுவல் மொழி என்பதற்கும்  பெரியளவு வேறுபாடு இல்லை. பெயர்தான் வேறு வேறு தவிர இரண்டும் ஒன்றுதான். அலுவல் மொழி என்பதாக ஒரு மொழியை முன் நிறுத்துவதே மற்ற மொழியை நசுக்கும்  போக்குதான்’ என்கிறது அக்கட்டுரை.
ரஷ்யாவின் சிறுபான்மையான மகாரஷ்யர்களின் மொழியை , ரஷ்யாவின் பிற மக்கள் பிரிவினர் மீது திணிப்பதென்பது தடியால் மக்களை அடித்து அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்புவதற்கு ஒப்பானதாகும்.  ரஷ்ய மொழியைக் கற்பது தங்கள் வாழ்நிலைமைகளுக்கும் வேலைக்கும் அவசியம் என்றால், நிர்பந்தம் எதுவும் இல்லாமலேயே அவர்கள் அதைக் கற்பார்கள். ஆனால் திணிப்பு நாட்டில் ஒற்றுமையைக் குலைக்கும் என்பதாக லெனின் கடிதம் வழியே தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். பிற்காலத்தில் சோவியத் யூனியன் என்கிற ரஷ்யா பல்வேறு நாடுகளாக உடைய மொழியே காரணமாக அமைந்தது.

கட்டுரையின் இறுதியாக, இந்தி தென் இந்தியாவில் ஆர்வமாகக் கற்றுக்கொள்ளும் மாநிலத்தின் வரிசையில் தமிழ்நாடு இரண்டாமிடத்திலிருக்கிறது. இந்தி என்பது அரசியலுக்காகவும், வட இந்திய பயணத்திற்கும் பெரிதும் தேவை என்பதை தமிழக மக்கள் உணரத் துவங்கியிருக்கிறார். இதை அதன் போக்கிலேயே விட்டுவிட்டு மூன்றாம் மொழி என்கிற இடத்தில் அம்மாநிலத்தின் அண்டை மாநில பிராந்திய மொழி, விருப்ப மொழி என்பதாக மும்மொழித் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதாவது கர்நாடாக - தமிழ்நாடு எல்லையையொட்டிய மாவட்டத்தினர் தமிழ், ஆங்கிலம், கன்னடம் ( விருப்பமிருந்தால்); அதேபோன்று தமிழ்நாடு - கேரளம் எல்லையையொட்டிய மாவட்டத்தினர் தமிழ் - ஆங்கிலம் - மலையாளம் இப்படியாக விருப்ப வாய்ப்பின் அடிப்படையில் மும்மொழிக் கொள்கையை அமைக்கலாம். அதை விடுத்து இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மூன்றாவது விருப்ப மொழி என்பது பிராந்திய மொழியின் மீதான இந்தி தேசியவாதத் தாக்குதல் என்றே பொருள்கொள்ள முடியும்!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புகழ் என்ன செய்யும்?

தெக்கணமும் அதிற்சிறந்த @அண்டனூர் சுரா

எனது நூல்களும் சமர்ப்பணமும்