மீரானும் காலத்தின் ஆவர்த்தனமும்

பதினாங்கு வயதுடைய ஒரு பெண்ணின் சடலம். முழு நிர்வாணமாக மல்லாந்து கிடக்கிறது. மேல்நோக்கி நிற்கும் சிறு குசங்களில் பற்கள் பதிந்த வடுக்கள். இழுத்துக் கிழித்த ஜம்பர் பாடி - இரு பக்கமாக விரிந்த கைகள். தொடையில் காய்ந்து ஒட்டிய இரத்தம்...
       யார்...?
       மௌனம்.
       எப்படி அடையாளம் சொல்ல முடியும்?எதை அடையாளம் கண்டு சொல்ல முடியும்? துறையில் உள்ளதா? மேகரையில் உள்ளதா?....
                என்பதாகத் துவங்கும் கூனம் தோப்பு நாவல் தொடக்கத்திலேயே பேசும் பொருளையும், எது குறித்த நாவல் என்பதையும் நேர்படச் சொல்லி வாசகர்களை நாவலுக்குள் பயணிக்க வைத்தவர் எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள். 
       ஒரு திரைப்படக் கலைஞன் மரணிக்கையில் அவரது ரசிகர்கள் அவரது திரைப்படத்தைப் பார்த்து தன் அஞ்சலியைச் செலுத்துபவதைப்போல, ஓர் அரசியல்வாதி இறந்துபோகையில் அவரது அரசியல் சுவடுகளை நினைவு கூர்ந்து அசைபோடுவதைப் போல ஒரு எழுத்தாளன் கால வெளியில் கலக்கையில் அவரது எழுத்தில், அவர் எழுதியதில் ஒன்றேயேனும் வாசித்து நிலைகொள்வதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். அப்படியாகத்தான் அவர் எழுதிய சிறுகதையொன்றை தேடத் துவங்கினேன். சாகித்ய அகாதமி வெளியீடாக, சா.கந்தசாமி தொகுத்த நவீன தமிழ்ச்சிறுகதைகள் தொகுப்பில் ஒரு கதை வாசிக்கக் கிடைத்தது.

       அவர் எழுதிய நாவல் வரிசைகளில் ' துறைமுகம் , கூனன் தோப்பு ' என் கைவசமிருந்தாலும் இரண்டையும் இதற்கு முன்பு ஒரு வாசிப்பிற்கு உட்படுத்தியிருந்தாலும் அவரது துக்கத்தை அனுசரிக்க இந்த ஒரு சிறுகதையே போதுமென மனம் வேண்டியது. காரணம் இதற்கு முந்தைய ஓர் எழுத்தாளின் கண்ணீர் அஞ்சலி வாசிப்பனுபவம்.
       சாகித்ய அகாதமி விருதுபெற்ற தோப்பில் முஹம்மது மீரானுக்கு முந்தைய சாகித்யர் மரணம்  பிரபஞ்சன். அவர் மரணமுற்ற நாளில் அவரது துக்கத்தை அனுசரிக்கும் பொருட்டு வானம் வசப்படும் நாவலைக் கையில் எடுத்து பாதி பக்கங்களைக் கூட என்னால் கடக்க முடியவில்லை. ஒரே மூச்சில் படித்து விடக்கூடிய நாவலல்ல அது. மிடறு மிடறாக பருக வேண்டிய, குறிப்பெடுக்க வேண்டிய, யாரிடமேனும் விவாதித்து அடுத்தடுத்த பக்கத்தில் மூழ்க வேண்டிய நாவல் அது. வானம் வசப்படும் நாவலுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல தோப்பில் முஹம்மது மீரானின் படைப்புகள்.
       தோப்பில் முஹம்மது மீரான்,தன் நாவல்களில் பெரும்பாலானச் சொற்களுக்கு கீழே  விளக்கம் கொடுத்திருப்பார்.  மலையாள சொற்கள் , இஸ்லாமிய சொற்கள், வட்டார வழக்குகள் தேவையான இடத்தில் தேவையான அளவிற்குப்  பயன்படுத்துபவர் அவர்.
                சிறுகதை என்பது எழுதுவதும் அல்ல, சொல்வதும் அல்ல. வாழ்வது. ஒரு வாழ்வை வெறும் சம்பவக் கோர்வையாக கடத்திவிட முடியாது. அப்படியாகக்  கடத்தியும், கடந்தும் விடுவது பூர்ண வாசிப்பாகிவிடுமா என்ன, அதற்காகத்தான் ஜோதிடக் கிளி, சீட்டுக் கட்டிலிருந்து ஏதேனும் ஒரு சீட்டை  எடுப்பதைப் போல எடுத்துவிடாமல் அவருக்கு நிகரான அவரது காலத்தோடு நெருங்கி பழகிய, எழுதிய, தொகுத்த ஒரு நூலிலிருந்து ஒரு கதையைத் தேடி எடுத்தேன். அக்கதை ' காலத்தின் ஆவர்த்தனம் '.
       ஆவர்த்தனம் என்னவொரு அழகானச் சொல். சமஸ்கிருத சொல்லாகவே இருந்தாலும் படைப்பிலக்கியத்தில், பேச்சில் தமிழ் மக்களின் நாவில் இரண்டறக் கலந்துவிட்ட சொல் அது.  எனக்கு முதலில் அச்சொல் அறிமுகமானது பள்ளி பருவம் ஒன்பதாம் வகுப்பில்தான். அணுக்கொள்கை என்கிற வேதியியல் பாடத்தில் நவீன ஆவர்த்தன அட்டவணை, நவீன ஆவர்த்தன விதிகள் எனும் வாயிலாக PERIODIC என்கிற சொல்லுக்கு நிகராக, மாற்றாக எனக்கு அறிமுகமானது.
                ஆவர்த்தனம் என்பதற்கு ஆங்கிலத்தில் Cyclical or Rotation என்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. இசைத் துறையில் அதிகம் பயன்படும் சொல் இது. ஒவ்வொரு இராகமும் தனி ஆவர்த்தனம் கொண்டது. இதை மனிதன் அவனது தனித்துவமான குணமாம்சத்துடன் பயன்படுத்தி இச்சொல்லைச் சிறுமைப் பிடித்தி விடுதல் கூடாது. அவன் ஆவர்த்தனமானனவன். யாருடனும் சேராதவன் என்பதாக இச்சொல்லைப் புனைவது அச்சொற்றொடரும் சொற்றொடரில் எழுவாயாக இருக்கும் அந்த ஒரு நபரும் வேண்டுமானால் தனித்துத் தெரியலாமே தவிர ஆவர்த்தனம் என்கிற  இச்சொல் அவ்விடத்திற்கு பொறுத்தமான ஒன்றன்று.
                ஆவர்த்தி , ஆவர்த்தம், ஆவர்த்தனம் மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சொற்கள். ஆவர்த்தி என்பது தடவை ( Turn). ஆவர்த்தம் - நேரம் ( Time ) அல்லது இன்னொரு முறை பாடுதல்ஆவர்த்தனம் - மறுதிருமணம், பிரத்யேகமான ஒன்றை இன்னொரு முறைச் செய்தல் என்கிற பொருள் புரிதலுடன் கதையின் தலைப்பை ஆவர்த்தனமாக ( இரண்டாம் முறையாக) வாசித்தேன். கதைக்கானப் பெயர்ச் சூட்டுவதில் தனித்துவமானவர் தோப்பில் முஹம்மது மீரான்.
                காலம் என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பார்வையில், அது பொருளற்ற வெறுமையானது. இப்பொழுது மணி ஐந்தாகிறது என்பதும், இன்று சனிக் கிழமை என்பதும், மே மாதம் முடிந்து ஜூன் பிறந்து விட்டது என்பதும் , ராகு, கேது என நல்ல நேரம் பார்ப்பதும் நேற்று இந்நேரத்திற்கு... என்பதாக ஒரு சம்பவத்தை நினைவு கூர்வதும் இந்த பால்வெளி மண்டலத்தில் பொருத்தமற்ற ஒன்று. இதையேதான் ஸ்டீபன் ஹாக்கிங்கின், A BRIEF HISTORY OF TIME என்கிற தத்துவத்தின் வழியே வலியுறுத்துகிறார்.
                இந்த பூமி ஒரே அச்சில் சுற்றவில்லை. ஒரே வட்டப்பாதையிலும் சுற்றவில்லை. சூரியன் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு பரந்த பால்வெளியில் நகர சூரிய மண்டலமும் கூடவே நகர்கிறது.  ஒரு சித்தன் கங்கையில் ஒரு முறை தலை மூழ்கி மறுமுறை தலை மூழ்கையில், அவன் கங்கையில்தான் நீர் மூழ்குகிறானே தவிர முன்பு மூழ்கி அதே நீரில் மூழ்கிவிடுவதில்லைஅப்படியானதுதான் காலமும். காலம் ஒளியின் வேகத்தை விடவும் வேகமானது. அத்தகைய காலம் ஒருவனின் வாழ்க்கையில் எப்படியாக ஆவர்த்தனம் கொள்கிறது என்கிற எதிர்ப்பார்ப்புடன் எனது வாசிப்பைத் துவங்கினேன்.
                கதையின்படி, கதைசொல்லி ஒரு பாத்திரமாக இருந்து கதையைச் சொல்லுகிறார். கதைசொல்லியின் மகன் நஜீப் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறவன். கல்லூரி கட்டணமாக ரூபாய் 750 கட்ட வேண்டும். இந்தப் பணத்திற்கு என்னச் செய்யப் போகிறனெனத் தவிப்பதும், நிமிடங்களைக் கழிப்பதும் கதையின் மையச்சரடு.
       தொகையைத் துகை என்கிறார் தோப்பில். துகை என்றால் தஞ்சை, தொண்டை வட்டார வழக்கில் துவையல்  என்று பொருள். ஆனால் நெல்லைசீமையில் துகை என்பது தொகையைக் குறிக்கும் ஒரு வழக்கு.
                வீட்டில் அனைவரின் முகமும், ' பணம் கட்டுவது எப்படி என்ற கேள்வி தொங்கிய முகங்களாக இருக்கின்றதுபணம் திரட்டும் முயற்சியில் இறங்கி பணம் கேட்டு அலைந்து இரவு வீட்டில் இளைப்பாறுகிறார். பஞ்சரிப்பு. என்னவொரு சொல்! மனைவி மீன் வாங்கிவரச் சொல்லி நச்சரிக்கிறார். ரூபாய்க்கு இருபது சாளை மீன். சாளை மீனை தமிழகத்தில் நொணலை அல்லது மத்தி என்றுச் சொல்வோம். தோப்பில் முஹம்மது மீரான் படைப்புகளின் சாராம்சமே இதுதான். வாசிப்பினூடே தம்மை கரைப்பதும், வட்டார வழக்குடன் இரண்டறக் கலப்பதும்தான்...
       மீன் வாங்க கடற்கரைக்கரைக்குச் செல்கிறார் கதைச்சொல்லி. இந்த இடத்தில் அவரது அங்கதத்தைப் பாருங்கள், மீன் கடைகள் வெளிநாட்டு  நறுமண வாசனையாக இருக்கிறதாம். இந்த வாசனை மோகம் மனைவிக்கும் இருக்கிறதாம்.  வெளிநாட்டு பேர்சியா சோப்பு மீதும், சென்ட் மீதும்...
                'உங்கெ மருமோனுக்கு ஒரு காயிதம் போடுங்கோ. ஆறு கட்டி சோப்புக்கும் கால் டஜன் ஸ்பரேக்கம் ', ' வேற?', ' எனக்கு ஒரு ஹேர் டையும் ' , ' ஆருக்கும் எதுவும் கேட்டு கடிதம் எழுதும் பழக்கம் எனக்கு இல்லை. பொறு மருமொவன் வந்தா தருவான்'
       இந்த உரையாடல் குடும்ப உறுப்பினர்கள் யார் யார் அவர்களின் குணாம்சங்களுக் காட்டும் இடமாக அமைகிறது. யாரிடமும் உதவி கேட்கவோ, கெஞ்சவோ மனதளவில் இடமில்லாத ஒருவர் கல்லூரிக் கட்டணம் செலுத்த  கடன் கேட்டு தெருத்தெருவாக அலைகிறார் என்பதைச் சித்தரிக்கும் இடமாக அது இருக்கிறது.
       மீன் வாங்கச் சென்றவர் மீன் மலிவு விலையில் அள்ளிச் செல்ல, அவர் பணமில்லாமல் வெறுங்கையோடு திரும்பிவருகிறார். அவரது கையில் வெளிநாட்டு சோப்பின் உறை இருக்கிறது. இந்த இடத்தில் அவர் பயன்படுத்தும் உவமை இது, ' வெறும் உறையைப் பார்த்ததும் அவள் முகத்தில் கரடி ஓடித் திரிந்தது'.
       அவருடைய தங்கை மகன் பஹ்ரைன் சென்று திரும்பி இருக்கிறான். அவனிடம் உதவிக் கேட்டு செல்லலாமென நினைக்கிறார். அவன் வெளிநாடு செல்வதற்காக பயணம் சொல்ல வருகையில் அவரது வீட்டில் சக வசதிகள் இருக்கின்றன. திரும்பி வந்திருக்கையில் வாடகை வீடு, வறுமை,... இத்யாதிகள். இதுவா நான் எதிர்ப்பார்த்த வாசிப்பினூடான காலத்தின் ஆவர்த்தனம்? இல்லை. கதை இன்னும் பயணிக்கிறது.
                '
நாளை கடைசி நாள், பணம் கட்டல்லேன்னா பரீட்சை எழுத முடியாது'
                தங்கை மகன் மருமகனார் வீட்டை நோக்கிச் செல்கிறார். மருமகனுக்குப் படிக்க உதவி செய்து, வெளிநாடு செல்ல பணம் கொடுத்த நினைவுகளுடன் பேருந்து ஏறி இறங்கி ஆட்டோவிற்கு கொடுக்க பணமில்லாமல் நடந்து செல்கிறார். தங்கை புன்னகையுடன் வரவேற்று உபசரிப்பு செய்கிறாள்வீட்டிற்கு வெளியே ஓடும் சாக்கடை கூட நறுமண சோப்பால் மணமணக்கிறது. குஷன் நாற்காலி, டீப்பாய், வரவேற்பறை... அவரது இருப்பு  மர நாற்காலியின் மீது அமர்கிறது.
                மருமகன் ஜகஜோதியாக காரில் வந்து இறங்குகிறார். அமைச்சர் வந்திறங்கின தோரணை. உடையில், உடலில்,...நிறைய மாற்றம்நெடிய ஆறு வருடங்களின் கலைக்கைகள் பின்னி உண்டு பண்ணிய நவ மாற்றங்கள். இங்கு  'கலைக்கைகள் ' இதற்கு முன்பு வேறெங்கும் , யாரிடமிருந்தும் வாசிக்கக் கிடைக்காத  ஒரு சொல்.
       மாமா, மருமகன் விசாரிப்புகள் நடந்தேறுகிறது. ' நஜீப் இப்பம் மெடிக்கலா, என்ஜியரிங்கா?', ' இல்லப்பா, பி. கடைசி ஆண்டு', ' எட்டோ பத்தோ லட்சம் கொடுத்து அவனெ மெடிக்கலிலே சேர்க்கப்படாதா...?'.
               
அவர் கொடும்புக்குள் சிரிக்கிறார்.
                ' பணம் புரட்ட முடியல்லேன்னா எனக்கு எழுதியிருந்தா உடனே அனுப்பித் தருவேனே'
                '
ஒங்களுக்கு ஒரு ஏசியும் ஃபிரிட்ஜூம் கொண்டு வந்தேன். பக்கதில புது வீடு கட்டி குடிபோனாங்க, செய்முறையா செய்திட்டே..., அடுத்த முற அனுப்புறேன். நஜீப்புக்கு ஒரு வாச்சும் அனுப்புறேன்'
       பல ஆயிரங்கள் வெகுமதியுள்ள பொருட்களை அனுப்பி வைப்பதாக சொல்லுபவனிடம் சிறு உதவி நாடி வந்ததை எப்படிச் சொல்வது - மனக் குழப்பம்.
                ' வியாபாரம் எப்படியிருக்கு? எக்ஸ்போர்ட் ஏதாவது செய்றீங்களா மாமா? ', ' பெரும் நஷ்டமாயிடுச்சுப்பா, நெடிஞ்சே போனேன்'.
                அமைதி!
                '
மாமா வந்தது?', ' ஒரு சிறு உதவி நாடி...', ' என்ன உதவி?', ' நஜீப்புக்கு நாளை பணம் கட்டினாத்தான் பரீட்சை எழுத முடியும்....', ' படிச்சு என்னச் செய்ய? அவனை ஏதாவது ஒரு கடையிலே வேலைக்கு உடலாமே?'
       குற்றவாளிக் கூண்டில் நிற்பதைப் போல தலை  குனிந்து நிற்கிறார். ' பழைய மாதிரியில்ல இப்ப அரபு நாடு...'
       கதை இவ்விடத்தில் ஈரத்தைப் பிசைந்து வீட்டை நோக்கி கடைசி பஸ்ஸில் பயணிக்கிறது. என் மென் வாசிப்பு கதையினூடே மெல்ல மெல்ல நகர்கிறது. காலம், ஆவர்த்தனம் இதன் பொருளை கதைக்குள்ளாகத்  தேடுகிறேன்.
                'மச்சான் ரூபா தந்துதா?'
       அவரது கையில் வெறும் குடை மட்டுமே இருக்கிறது. ' வாப்பா..!'  மகனின் அவலக்குரல்.
               
வாப்பா சொல்கிறார், ' முன்னெ கடைசி பரீட்சைக்கு கட்ட 60 ரூபா தருவாரில்லாமெ உன் வாப்பாவின் கல்லூரி படிப்பு நின்னு போனது ஒனக்குத் தெரியாது. எனக்கெ அதே அனுபவம் இப்பம் உனக்கும். நாளை உன் மகனுக்கெ படிப்பும் இதுபோல நிப்பாட்ட வேண்டிய சந்தர்ப்பம் வந்தாலும் நீ சோர்ந்து போகாதப்பா. இதெல்லாம் காலத்துக்கே ஆவர்த்தனம். மகனும் மனைவியும் உறங்கினார்களா, அல்லது ஏமாற்றங்களின் பாறை அழுத்தத்தால் உறங்காமல் கிடக்கின்றனரா என்று கவனிக்க ஒவ்வாத மனநிலை.
               
ஒரு காலம் தன் ஆவர்த்தனத்தை மூன்று முறை நடத்திடுமா?. ஒரு வெறுமையின் சுதி அத்தனை கர்மத்தனமானதாசெல்வேந்தர்களின் இதயதுடிப்புகளை காலம் ஆவர்த்தனம் செய்யலாம், அது அவர்களுக்கோர் மேலுமொரு கொண்டாட்டம்ஆனால், பஞ்சரிப்பு, பசியரிப்பு கொண்டவர்களின் ஆவர்த்தனம் என்பது  காலக் குரோதம்! என்பதுதான் தோப்பில் முஹம்மது மீரான் சொல்லாது விட்டுச் சென்ற அந்த ஓரிடம்!
                தோப்பில் முஹம்மது மீரானை வாசித்தல் என்பது, சம்பவத்தை வாசித்தல், கதையை வாசித்தல், பாத்திரம் வழியே வாசித்தல் அன்று. மொழியை வாசித்தல். மொழி வழியே வாசித்தல். மொழிகளுக்காக வாசித்தல்.
       மொழியின் ஆவர்த்தனத்தில் அவரும் ஒரு மொழி - தோப்பில் முஹம்மது மீரான்.

         - பேசும் புதிய சக்தி ஜூன் ,2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புகழ் என்ன செய்யும்?

தெக்கணமும் அதிற்சிறந்த @அண்டனூர் சுரா

எனது நூல்களும் சமர்ப்பணமும்